பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிலம்பு நெறி

163


என்று தென்றலுக்கு உவமையாகக் கோவலனை எடுத்துக் காட்டுவதால் அறியலாம்.

இங்ஙனம், கோவலன் விளங்கியதற்குக் காரணம் அவன் மட்டுமல்லன். அவன் காலத்திய சமுதாய அமைப்பும் காரணமாகும். கோவலன் காலத்தில் சொத்துடைமை தோன்றி வளர்ந்துவிட்டது. சொத்துடைமை தோன்றி வளர்வதற்கு முன்பு, காதல் வாழ்க்கையில் சுதந்தரமிருந்தது.

சொத்துடைமை தோன்றிய பிறகு, சொத்தைப் பாதுகாப்பதற்காகக் காதல் வாழ்க்கையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அப்பொழுது தான், பலரை மணந்து வாழ்ந்த தலைமகன், ஒருத்தியை மட்டும் மணந்து வாழும் நியதிக்கு உட்படுத்தப்படுகிறான். காரணம் சொத்து சிதறிப் போகாமல் குவிந்த முறையில் இருக்க வேண்டும் என்பதாகும்.

ஆனால், பால் உணர்ச்சி வழிப்பட்ட வாழ்க்கையில், தலைமகன் ஒருத்தியொடு கூடி வாழ்வதன் மூலம் மன நிறைவு பெற இயலாது போய்விட்டது. இந்தச் சூழ்நிலையில் பரத்தையர் வாழ்க்கைமுறை ஏற்பட்டது. இந்தக் கால கட்டத்திற்குப் பிறகுதான், பரத்தமை என்ற ஒழுக்கக்கேடு கால் கொண்டது.

இந்தப் பரத்தமையும்கூட, சங்க காலத்தில் ஒருத்திக்கு ஒருவன் என்ற முறையிலேயே முறைப்படுத்தப்பட்டிருந்தது. பின்பு, காலப்போக்கிலே தான், பரத்தமை வாணிக நிலைக்குத் தள்ளப்பட்டுச் சீரழிவுக்குள்ளாகியது.

ஆதலால் இயல்பான வளர்ச்சிப் போக்கும், அவனது வளர்ச்சிப் போக்கை, உந்திச் செலுத்திய அவன் காலத்திய, சமுதாய நிலையும் கோவலனை, கண்ணகியை விட்டுப் பிரித்தன. கண்ணகியிடம் எந்தக் குறையும் இல்லை.

தமிழ் நாகரிகம், பெண்ணைப் பெருமைப்படுத்துகிறது. பெண்ணுக்கு உரிமைகள் அனைத்தும் உண்டு. சிறந்த நாகரிக