பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிலம்பு நெறி

165


அனைத்தும் நிறைந்தவள். அதனாலன்றோ கோவலன் கண்ணகியைவிட்டுப் பிரிந்து மாதவியிடம் சென்றபோது ‘வடு நீங்கு சிறப்பின் தன் மனையகம் மறந்து” என்று இளங்கோவடிகள் கண்ணகியைப் பெருமைப்படுத்துகின்றார்.

‘தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்’

என்று தமிழ்மறை காட்டும். பெண்ணுக்கு இலக்கணமாக வாழ்ந்தவள் கண்ணகி. ஒரு பெண்ணின் கற்பைக் கணவன்காக்க முடியாது. கற்பு என்பது உடல் சார்பான ஒழுக்கம் மட்டுமன்று. பொதுவாக, ஒரு பெண் தன் அழகு நலத்தினைப் பிறர் அதாவது பரத்தமைக் குணமுடைய ஆடவர் காண, கண்டு மகிழ வாய்ப்பளிக்கக் கூடாது.

அதுமட்டுமன்று. தானும் தன் தலைவனைத் தவிர வேறு ஆடவர் நலனை உள்ளத்தில் நினைத்துக் காமுற்றுப் பாராட்டுதல் கூடாது.

அதனாலன்றோ கற்புடைய மகளிர் “பிறர் நெஞ்சு புகார்” என்று சிறப்பித்துக் கூறுகிறது மணிமேகலை.

ஆதலால், கற்பு என்பது உடல் சார்பு உடையது மட்டுமன்று. உடல் சார்பான கற்பைக் கணவனின் காவல் காப்பாற்றித் தரும். சிந்தனையில், உணர்வில் கெட்டபிறகு உடல் காப்பாற்றப்பட்டு என்ன பயன்? அதனால் தான் தமிழ் மறை ‘தற்காத்து’ என்று கூறுகிறது.

தற்காத்தலிலேயே தன் கணவனுக்கு எதிரிடையான எந்தக் குணக் கேடுகளையும் தான் பெறாது ஒழுகுதலும் அடங்கும்; பெருமை, புகழ் ஆகியனவும்கூட அடங்கும். இது, கணவனுக்கும் பொருந்தும்.

கண்ணகி தற்காத்துக் கொண்டு வாழ்ந்த பெண்ணிற் சிறந்த பெருந்தகையள். கோவலன் நிலா முற்றத்தில் கண்ணகியுடன் கூடி வாழ்ந்த காலத்தில்தான், கண்ணகி