பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிலம்பு நெறி

167


புகழையும் கெடுக்கும் எந்தச் செயலிலிருந்தும் தன்னை விலக்கி, காத்துக் கொண்டாள். இதுவே பெண்ணின் கற்பு-பெருமை, கண்ணகி போற்றத்தக்கவள்.

கண்ணகி கோவலனுக்கு ஏற்ற மனைவி என்ற தகுதி மிகுதியும் உடையவளாக இருந்தாள் என்பதனைத் தேவந்தியும் உணர்த்துகிறாள். கோவலன், கண்ணகியைப் பிரிந்ததற்குக் காரணம் கண்ணகியல்லள்.

கோவலன் கண்ணகியை வெறுத்து ஒதுக்கவில்லை என்பதைக் “கணவற்குக் கைத்தாயுமல்லை” என்று தேவந்தி கூறி விளக்குகிறாள். இங்ஙனம் இருக்க, கண்ணகியிடம் கலை இல்லை, கவர்ச்சியில்லை, அதனால் கோவலன் பிரிந்தான் என்றெல்லாம் கருதுவது மரபன்று.

தேவந்தி, கோவலன் கண்ணகியைப் பிரிந்ததற்கு ஊழையே காரணமாகக் காட்டுகிறாள். அதாவது, மகளிர் கணவன் பொருட்டு நோற்கும் நோன்பினை முறையாகச் செய்யாமையால் விளைந்த தீயூழ் என்று சொல்கிறாள்.

ஆனால், இளங்கோவடிகள் தேவந்தியின் வாயிலாகத் தான் இங்கு ஊழை நினைவூட்டுகிறார். இங்கு ஊழின் விளைநிலமாகிய சமுதாய அமைப்பு, சீராக இன்மையே கோவலன் பிரிவுக்குக் காரணம்.

சமுதாய அமைப்பின் சீரின்மையை அரசு திருத்தி நெறிப்படுத்தலாம். ஆனால் புகாரிலிருந்த சோழப் பேரரசு அதைச் செய்யத் தவறிவிட்டது அல்லது தனி ஒருவர், தன் முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கிற சமுதாய அமைப்பை, எதிர்த்துப் போராடலாம். அந்தத் தகுதியும் கோவலனுக்கு இல்லாமல் போய்விட்டது.

காரணம், கோலவன் பரத்தை வழி ஒழுகினதோடன்றி, நெறிமுறை சார்ந்து வாழாது நகரில் சுற்றித் திரியும் இளைஞர்களுடன் கூட்டுச் சேர்ந்துவிட்டான். வறுமொழி பேசியும், நெடிய நகை நகைத்தும், வறிதே வாழும்