பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

182

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


துறையில் கண்ணகியால் முழுமையாக வெற்றி பெற முடியவில்லை. அஃது அவள் குறையன்று. கண்ணகி காலத்தில் சமுதாய அமைப்பு சீர் கெட்டிருந்தது.

பரத்தமை ஒழுக்கம் தலைமகனுக்குரிய ஒழுகலாறு போல ஏற்றுக் கொள்ளப்பெற்ற தீயூழ்க் காலம். கண்ணகியால் என்ன செய்ய இயலும்? அந்தச் சூழ்நிலையையும் அவள் எதிர்த்துப் போராடுவதென்றால் கோவலனின் விருப்ப உணர்வுகள் கெட்டுப் போகுமோ என்ற உணர்வில் தன்னல மறுப்பிலும், கோவலனின் நலம் பேணுதலிலும் இருந்த முனைப்பு அவ்வகையில் அவளைப் போராடத் தூண்டவில்லை.

அந்த நல்லொழுக்கம் தற்சார்புடையதாக அமைந்து விட்ட குறையே அது. ஆதலால், கண்ணகியை உயர்ந்தோர் பாராட்டுகின்றனர். இதனைக் காப்பியம் முழுதும் காணலாம்.

கவுந்தியடிகள் ஒரு துறவி. அதிலும் சமணத்துறவி. சமணத் துறவியருக்குப் பெண்மை இசைவிலாத ஒன்று. ஆயினும் கவுந்தியடிகள் கண்ணகியை மனங்குளிரப் பாராட்டுகிறார். ஏன்? தெய்வம் என்றே பாராட்டுகிறார்.

அருக தேவனையன்றி மற்றவரை வாழ்த்தாத கவுந்தியடிகளின் வாயினால் கண்ணகி தெய்வம் என்று போற்றப் பெறுதல் எளிதில் கிடைக்கத்தக்கதா? அல்லது கவுந்தியடிகளுக்குத்தான் இங்ஙனம் போற்றிப் பாராட்ட எளிதில் பாத்திரங்கள் கிடைக்குமா?

“கற்புக் கடம்பூண்டஇத் தெய்வ மல்லது
பொற்புடைத் தெய்வம் யாம் கண்டிலமால்”

என்று பாராட்டுகிறார் கவுந்தியடிகள்.