பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

186

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


முயன்றது. ஆயிரத்தெண் கழஞ்சு பொன் அளித்து மாலையை வாங்கி மாதவியை அடையலாம் என்று கூறப்பட்டாள்.

கோவலன் மாலையை வாங்கினான்; மாதவியின் மனையில் புகுந்தான்; மாதவியை அடைந்து இன்புற்று மயங்கி அமைந்தான்; மாதவியைப் பிரியா இயல்பினனாகப் பெருவிருப்புடையவனாகக் கோவலன் விளங்கினான்; மாதவியின்பால் உள்ள ஈடுபாட்டினால் கண்ணகியை மறந்தான்; மனையறத்தை மறந்தான்; மாதவியின் வீட்டிலேயே வாழ்பவனாயினான்.

மாதவி கோவலனின் மனம் மகிழ்ந்து அமைவதற்கு ஏற்றவாறு கோவலனைக் காதலனாகக் கொண்டு அவனை வாழ்வித்தாள். காதல் வாழ்க்கை சிறப்புற அமைதற்கேற்றவாறு கோவலனுக்குக் கலவியும் புலவியும் ஒருங்கேயளித்து இன்புறுத்தினாள். மாதவி இத்துறையில் கோவலனுக்கு விருந்தாக அமைந்தாள்.

கோவலனைப் பேணி வளர்த்த மாதவி

தலைமகனுக்கு வாய்க்கும் வாழ்க்கைத் துணை நலம் சிறப்புற அமையின் அத்தலைமகன் குறைகளினின்றும் விடுதலை பெறுவான்.

ஒரு கல்லை அருச்சகர் உபாசித்து அருச்சிப்பதன் மூலம் கடவுளாக்குவதைப் போல, ஒரு பெண் தன்னுடைய கணவன் எவ்வளவு குற்றங்குறைகளுடையவனாக இருந்தாலும், அவள் மட்டும் சிறந்த அன்பும் செயல்திறனும் உடையவளாக இருப்பின், தன் கணவனைச் சிறப்புடைய தலைமகனாக விளக்கமுறச் செய்ய முடியும்.

காதல் வாழ்க்கையென்பது களிப்புக்குரியது மட்டுமன்று; ஆக்கத்தின் வழிப்பட்டது; கடமைகளின் வழிப்பட்டது.