பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

9

"ஆதலால், ஊழியல் என்ற இந்த ஒழுங்கமைவு நியதி, எதிர்ப்பதற்குரியதன்று; வரவேற்கத்தக்கது."

மேடையருவியாகவும், மேன்மைத் துறவியாகவும் மிளிர்ந்து, நாற்பதாண்டுக்காலத் தமிழகத்தின் நாடிநரம்புகளை எல்லாம் செழுமைப்படுத்திச் சமயவுணர்வையும், சமுதாயச் செறிவையும் இரு சிறகுகளாகக் கொண்டு, தமிழ்ஞானப் பறவையாக விண்வெளியில் பறந்து மகிழவேண்டும் என நினைந்த தாயுள்ளம், அடிகளாரின் திருவுள்ளமாகும். எழுத்தாலும் பேச்சாலும் ஈடில்லாத் தொண்டாற்றி, எடுத்தும் மறுத்தும் தனது கருத்தை நிரல்பட தொடுத்துப் பேசும் தன்னார்வச் சிந்தனையை அனைவர் மாட்டும் வளரச் செய்த பட்டிமண்டபப் பாங்கறிந்து நடத்திய சான்றோராகவும் அடிகளார் திகழ்ந்தார்கள். தமிழகம் செய்த தனிப்பேறாகப் பொதுமைச் சுடராகவும், பொழிவரைத் திலகமாவும் நமக்கு பொன்னம்பல அடிகளார் இன்று வாய்த்துள்ளார்கள். 'நம்பியும் என் நாயகனை ஒக்கின்றான்' என்ற நல்லுரை நாடெங்கும் ஒலிக்கின்றது. அடிகளார் பேசிய உரைகளையும், மடல்களையும் தொகுத்து வெளியிடும் பணி, அரிய இலக்கியப் பணியாகும். மேலோர் மிழற்றிய தமிழை இந்நாளில், நினைந்து போற்றுவது தமிழ் மக்களுக்கு மேலான கடனாகும்,

பேராசிரியப் பதிப்பாசிரியராகத் திகழும் பெருஞ்சிறப்பு. மணிவாசகர் பதிப்பக உரிமையாளர். 'செந்தமிழ்ச் செம்மல்' முனைவர் ச. மெய்யப்பனாருக்கே உரியது.

நமது தமிழுலகம் நையாமல் உய்தி பெறவேண்டும் என்னும் ஒரு பெருங்கருத்தோடு, தமிழ்வளர்ச்சிப் பணிகளைப் பல' நிலைகளில் அவர் ஆற்றி வருவது பாராட்டுக்குரியது. செந்தமிழ் வடிவாய் வாழ்ந்த மூதறிஞர் வ.சுப. மாணிக்கனார் மகிழ்ந்து பாராட்டிய தகுதிப்பாடு, மெய்யப்பனார் புகழுக்கு அமைந்த பூணாரமாகும். மணிவாசகர் பதிப்பகத்தை மகிழ்ந்து போற்றுகிறேன்.

அடிகளார் வழங்கும் மணியுரைகளின் மடலமாக இந்நூல் மாட்சி பெறுகிறது. அடிகளார் புகழைப் போற்றும் இத்தமிழ் உலகம், இம்மல் ரலங்கலை மகிழ்ந்தணியும். என்பதில் ஐயமில்லை .

சென்னை - 600 102.

19.10.2001.