பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிலம்பு நெறி

197



கோவலனை, அழகாலும், மணத்தாலும், உணர்வாலும் ஈர்த்து வயப்படுத்தும் கடிதம் எழுதுகிறாள். கடிதத்தின் தரம் நோக்கி இளங்கோவடிகள் அதனைத் “திருமுகம்” என்று சிறப்பிக்கிறார்.

திருமுகத்திற்குரிய செய்திகளை மாதவி, எளிதில் எழுதிவிடவில்லை. என்ன எழுதுவது என்பதைப் பல தடவை தனக்குத்தானே பேசித் தெளிந்த உணர்வில் எழுதினாள். அந்தத் திருமுகம் எத்தகைய குற்றமும் குறையும் இல்லாதிருந்ததால் “மழலை” என்று இளங்கோவடிகள் சிறப்பிக்கின்றார்.

மழலைச்சொல் என்பது உள் நோக்கமில்லாதது; தூய்மையானது; இளங்கோவடிகளின் “மழலையின் விரித்துரை எழுதி” என்ற வரி மாதவியின் துய்மையைப் புலப்படுத்துகிறது.

திருமுகத்தில் உலக வாழ்க்கையின் இயற்கையையும் நோக்கத்தையும் எடுத்துக் கூறுகிறாள். உயிர்கள் நிலையானவை; உலகில் பிறந்து துய்ப்பன துய்த்து மகிழ்ந்து நிறைவெய்துதற்குரியன. இதில் காதல் வாழ்க்கை சிறப்புடையது.

உயிர்களுக்குக் காதலுணர்வு தோன்றி வளர்ந்து முறையாகத் துய்த்து மகிழும் விருப்பங்களை உருவாக்க அன்னை உமையம்மை, இன்ப உணர்வைத் தோற்றுவிக்கும் கரும்பைத் தன் கரத்தில் ஏந்தியிருக்கிறாள்.

அதுபோலவே அன்னை உமையம்மையின் நோக்கத்தை நிறைவேற்றும் வேனிற்காலத் தலைவன் காமவேளும் கரும்பு வில்லைக் கொண்டிருக்கிறான். காமவேளின் கடமை உயிரினங்கள் தமக்குரிய துணையைத் தேர்ந்தெடுத்துப் புணர்ந்து மகிழத் துணையாயிருப்பது.

கூடி வாழ்ந்த காதலர் யாதானும் ஒருவகையில் சிறு பொழுது பிரியினும் வேனில் தலைவன் வருத்துவான்;