பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிலம்பு நெறி

201


யுடையவளாக விளங்குகின்றாள். இது மாதவிக்குள்ள பெருமை.

கோவலனும் மாதவி தீது இலள் என்று உணர்கிறான். மாதவியின் திருமுகத்தைத் தன் பெற்றோரிடம் காட்டுமாறு கோசிகன் வாயிலாகக் கொடுத்தனுப்புகிறான்.

இங்ஙனம் வளர்ந்த மாதவி, துறவு நிலைக்குரிய உளப்பாங்கினை அடைந்தாள். தான்மட்டுமல்ல. தன் அருமந்த செல்வி மணிமேகலையையும் கூட இளமைப் பருவத்திலேயே பெளத்தத் துறவியாக்குகிறாள். ஏன்? சமூகத்தில் தனக்கு-கணிகையர் குலத்துக்கு இருந்த இழி நிலையை எண்ணி ஏங்குகிறாள்.

தூய்மையையும் காதல் மனைவிக்குரிய கடைப் பிடியையும் மேற்கொண்டொழுகினாலும், எளிதில் தன்னை நீங்கி கோவலனை நினைந்து வருந்தாது போனாலும், இதற்குக் காரணமாயமைந்த சமுதாய நியதிகள் மாதவியை வருத்தியிருக்கிறது.

அதன் காரணமாக அவளுக்கு ஏற்பட்டதுயரம் மிகுதி, கோவலன் கொலையுண்ட செய்தி, மாதவியை மரணத்துக்கு ஆளாக்கவில்லை, அதனால் அவள் கற்பு மூன்றாந் தரத்தது என்பர் அறியாப் பேதையர் சிலர்.

கணவன் இறந்தவுடன் இறப்பது மட்டுந்தானா கற்பின் கடமை? அப்படியானால் கண்ணகி கூடத்தான் உடனே சாகவில்லை.

கற்பு என்பது கணவனை, கணவனின் புகழை, கணவனின் குறிக்கோளைக் காப்பாற்றுவதிலும் அமைந்து கிடக்கிறது.

பாண்டிமாதேவி, பாண்டியன் இறந்தவுடன் உயிர் நீத்தாள், ஆம்! பாண்டியன், பாண்டிமாதேவிக்கென்று யாதொரு கடமையும் விட்டுச் செல்லவில்லை. அதனால் பாண்டிமாதேவி உடன் உயிர் துறந்தாள்.