பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிலம்பு நெறி

207


நிலையில் தான் அரசாளும் பொறுப்பு இன்பச் சார்புடையதல்ல, துன்பம் மிகுதியுடையது என்று கூறுகின்றான்.

நாட்டில் மழை வளம் குறைந்தாலும் சரி, உயிர்கள் வருத்தமுற்றாலும் சரி செங்கோல் செலுத்துவது துன்பமேயாம். போற்றத்தக்கதல்ல என்பது செங்குட்டுவன் கருத்து.

பாண்டிய நாட்டில் நடந்த நிகழ்வுகள் பற்றி-பாண்டிய அரசனைப் பற்றி செங்குட்டுவனிடம் இகழ்வுக் குறிப்பு யாதொன்றம் தோன்றவில்லை. மாறாகப் பாண்டியன் நெடுஞ்செழியனை நினைத்து அரசுப் பொறுப்பின் கண் உள்ள துன்பத்தையே நினைவு கூர்கிறான். இதனால் செங்குட்டுவன் பிறர் இகழ்ச்சியைக் கண்டு மகிழாத பெருந்தகை என்பதும் புலப்படுகிறது.

இன்றைய நிலை தலைகீழ்த் தடுமாற்றம். இன்று அரச பதவிகள், பணம் பண்ணும் பதவிகளாகப் போயின. அதுமட்டுமா? ஆரவாரமான சுகந்தழுவிய வாழ்க்கையும் கிடைக்கிறது. இன்று நடப்பவை அரசுகள் அல்ல, பெரிய வியாபாரக் கடைகள். அவ்வளவுதான்.

செங்குட்டுவன், தாபதர்கள் வாயிலாக ஆரிய அரசர்கள் தமிழ் நாட்டரசர்களை இழித்துக் கூறியதைக் கேட்டுப்பொருமினான்; ஆரிய அரசர்கள் கொட்டத்தினை அடக்க வேண்டும் என்று உறுதி பூண்கின்றான்; வஞ்சினம் மேற்கொள்கின்றான்.

அதுபோது அந்த அவையிலிருந்த ஆசன் எழுந்து, “சேரர்குல மன்ன! இமய வரம்ப! நின்னை இகழ்ந்தன ரல்லர்” என்று கூறினான். ஆயினும் செங்குட்டுவனின் சினம் தணியவில்லை. “எம்மை இகழ்ந்தால் என்ன? மற்ற தமிழ் அரசுகளைப் பழித்தால் என்ன? தமிழ் நாட்டவர் ஒரு மரபினர்” என்று இனமான உணர்வுடன் கூறுகிறான்.

தமிழருக்குத் தேவை தன்மான உணர்ச்சி. தன்மான உணர்ச்சி இருந்தால் மட்டும் போதாது. இனமான