பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிலம்பு நெறி

209


வீரமன்று என்று கூறி விடுகின்றனர். இன்று வரையில் தமிழகம்-தமிழர் நலம் காக்கும் பெருந்தகையாளர்களைக் கண்டதில்லை. இன மானம் என்பது கடுகளவு கூட இல்லை.

இமயக் கல் கொண்டு கண்ணகிக்கு-பத்தினித் தெய்வத்திற்குச் சிலை அமைக்கிறான் செங்குட்டுவன். கங்கை நீரினைத் தெளித்து வழிபாட்டுக்குரிய திருமேனியாக்குகிறான். கண்ணகி பத்தினிக் கோயிலில் நாள்தோறும் வேள்வி முதலியன நிகழ்த்தினான்.

நாள்தோறும் வழிபாடு நடக்க தேவந்தி மூலம் ஏற்பாடு செய்தான். கண்ணகி திருக்கோயிலை வலம் வந்து வணங்கினான். அப்போது செங்குட்டுவனுடன் ஆரிய அரசரும், குடகக் கொங்கரும், மாளவ வேந்தரும், இலங்கைக் கயவாகுவும் உடனிருந்து வணங்கினர். கண்ணகிக்குத் திருக்கோயில் எடுத்தமையால் தமிழ் நாட்டில் பத்தினி வழிபாடு தொடங்கப் பெற்றது; வளர்ந்து வருகிறது.

செங்குட்டுவன் கண்ணகி கோட்டம் அமைத்துக் கடவுண்மங்கலம் செய்தபோது சிறைப்பட்ட ஆரிய அரசரை விடுதலை செய்து அரசு விருந்தினர் தகுதியில் உபசரணை செய்து பத்தினி வழிபாடு நிறைவெய்தியவுடன் அவரவர் நகருக்குச் செல்லுமாறு ஏற்பாடு செய்தான். இச்செயல் செங்குட்டுவனின் பெருந்தகைமைக்கு எடுத்துக்காட்டு.

சேரன் செங்குட்டுவன் சிறந்த அரசன், வீரன். மனையறம் காத்தவன்; இனமானம் பேணியவன். மற்றத் தமிழரசர்களிடம் மதிப்புணர்வு காட்டியவன்; போற்றியவன்.

சிலம்பு விளைத்த புதுமை

சிலம்பு, தமிழ் இலக்கிய உலகில் பூத்த மலர்களில் மணம் மிக்கது. தூய தமிழ், தெளிந்த நடை, குறிக்கோள் உள்ள படைப்பிலக்கியம்; முத்தமிழ்க் காப்பியம்; தமிழகம் தழீஇய இலக்கியம்; சமூக நலம் பொதுளும் காப்பியம்.