பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

212

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


“வறுமொழி யாளரொடு வம்பப் பரத்தரொடு
குறுமொழிக் கோட்டி நெடுநகை புக்குப்
பொச்சாப் புண்டு பொருளுரை யாளர்
நச்சுக் கொன்றேற்கு நன்னெறி யுண்டோ”

என்று கோவலன் கூறுவதன் மூலம் அறியலாம்.

மாதவி, பரத்தையர் குலத்தில் பிறந்த பெண். ஆனால், சமுதாயத்திலேயே பரத்தைமையை அடியோடு அகற்றத் தவம் செய்த முதற்பெண். பரத்தைமைத் தொழிலிலேயே ஈடுபடுவது மரபு என்றெல்லாம் சித்திராபதி முதலியோர் வற்புறுத்தியும் மாதவி பரத்தையாக வாழாமல் பத்தினியாக வாழ்ந்து வெற்றி பெற்றது சிலம்பு விளைவித்த புதுமை.

மாதவி, கோவலனைக் கணவனாகக் கொண்டே வாழ்கிறாள். கோவலன் பரத்தைமை ஒழுக்கமுடையவன். ஆயினும், மாதவி பரத்தையல்லள் பிறப்பின் ஒழுக்கத்தை மாற்றிப் புதுமை செய்தாள் மாதவி. தமிழ் நாட்டில் பரத்தைமையை அகற்றும் முயற்சியைத் தொடங்கியது சிலம்பு விளைவித்த புதுமை.

கோவலன் மதுரைக்கு வருகிறான். புதிய வாழ்க்கையைத் தொடங்க சிலம்பை விற்க நினைக்கிறான். சிலம்பை விற்கப் பாண்டிய நாட்டுத் தலைநகரின் கடைவீதிக்குச் செல்கிறான். கோவலனிடம் உள்ள சிலம்பு, கடைவீதியில் விற்கக்கூடியது அல்ல; சாதாரண மக்கள் வாங்கக் கூடிய சிலம்பும் அல்ல. பாண்டிய அரசன் வாங்கவேண்டும் அல்லது மிகப்பெரிய வணிகர்கள் வாங்க வேண்டும். இத்தகு விலை உயர்ந்த சிலம்பை விலை கூற, மதுரை நகர வீதிகளில் மறுகி மறுகி நடக்கிறான்.

கோவலன் தனது வீழ்ச்சியை நினைத்து-மதுரை நகரில் சிலம்பை விலை கூறி வாழ நேரிட்டதே என்று வெட்கப்பட்டு மறைவாக விலை கூறி விற்க நினைத்து மறுகுகிறான். தன் நிலைக்கு இரங்குகிறான்; வெட்கப்படுகிறான். நாடறிந்த