பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிலம்பு நெறி

213


வணிகக் குடும்பத்தைச் சேர்ந்தவன். குடும்பப் புகழ் போய்விடக் கூடாதே என்பது கோவலனின் கவலை.

தன்னை உணரும் திறன் படைத்த சராசரி மனிதனின் உள்ள இயல்பு இது. உளவியல் பாத்திரப் படைப்பில் சிந்தனை செய்து திருத்திக் கொள்ளும் பாத்திரமாக கோவலனைப் படைத்தது இலக்கிய உலகில் சிலம்பே. ஆதலால் கோவலன் இலக்கிய உலகில் வாழ்கிறான்.

கோவலன் தன்னிலை தாழ்ந்தமையை எண்ணி வெட்கிப் போனதாலேயே கொலைக் களத்தில் தான் கள்வனல்ல என்று கூறாமல், மறுக்காமல், வாதாடாமல், திகைப்புண்டு மெளனம் சாதிக்கிறான். ஆங்குப் பேச நேரின் குடும்பம், சோழப் பேரரசு முதலியவற்றை எடுத்துக் கூற வேண்டிவரும். அது மரபல்ல; புகழும் தராது என்று எண்ணியே மெளனம் சாதிக்கிறான். குல மரபு காக்கப் பழியைச் சுமந்து கொலைக்குக் கோவலன் உடன்பட்டது கோவலனின் உயிர் மானமாக இருந்தது என்று உணர்த்துவது புதுமை.

கோவலன் கள்வன் என்று பழி சுமத்தப்பட்டுக் கொல்லப்பட்டுவிட்டான் என்ற செய்தி கண்ணகிக்குக் கிடைக்கிறது. கண்ணகி உணர்ச்சி வசப்படாமல் அறிவை இழக்காமல் நடந்து கொண்டமுறை இலக்கிய உலகத்திற்கோர் புதுமை.

கண்ணகி ஆற்றொணாத் துயரத்திற்காளானாலும் அழுது புலம்பியவாறு உட்கார்ந்து விடவில்லை. கண்ணகியின் அவல நிலையிலும் அறிவு தலைப்படுகிறது; போர்க்குணம் தலைப்படுகிறது. செய்ய வேண்டுவனவற்றைச் செய்கிறாள்; செய்யத் தலைப்படுகிறாள். சிலம்பில் வழக்குரை காதை அற்புதமான படைப்பு.

கண்ணகி நடந்தனவற்றை பாதிக்கப் பெற்ற கோவலனிடம் கேட்டறிய முதலில் விரும்புகிறாள்; நேரே கொலைக்