பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

220

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பாண்டிய நாட்டில் பயிலவைத்துச் சேரநாட்டில் தெய்வமாக்கினார். தமிழகத்தின் மூன்று நாடுகளையும் தழுவிய காப்பியமாகத் திகழ்வது சிலப்பதிகாரம் ஒன்றேயாம்.

மூன்று நாடுகளைத் தழுவிய காப்பியம் மட்டுமன்று. அது முத்தமிழ்க் காப்பியமாகவும் திகழ்கிறது. உலகில் வேறு எந்த மொழியும் இயல் இசை கூத்தென முப்பிரிவுகளைக் கொண்டு-அமைந்து விளங்கவில்லை. ஒரு துறைக் காப்பியமாக அமைபவை சமுதாயத்தின் பல்வேறு துறையினரும் அனுபவித்தற்குரியனவாக அமைவதில்லை. இயற்றமிழைப் புலமைமிக்க சான்றோர்களே அனுபவிக்க முடியும். இசைத்தமிழை இயற்றமிழ்ப் புலமை குறைந்தோரும் அனுபவிக்கலாம். கூத்தை மிகச் சாதாரண மக்களும் அனுபவிக்கலாம். சமுதாயத்தில் உள்ள இந்த மூவகைத் துறையினர்க்கும் பயன்படும் வண்ணம் அமைந்துள்ள ஒரே காப்பியம் சிலப்பதிகாரம்.

தனிமனித வாழ்க்கையிலும்கூட அறிவு, உணர்வு, செயல், படிவ வளர்ச்சி தேவை. இயற்றமிழ் அறிவு வளர்ச்சிக்கும், இசைத்தமிழ் உணர்வுப் பெருக்கத்திற்கும், கூத்துத்தமிழ் செயற்பாட்டிற்கும் துணை செய்யும்.

வாழ்க்கையின் உறுதிப் பொருள் மூன்று என்று அற நூல் கூறும். அவை, அறம் பொருள் இன்பம் என்பனவாம். இம் மூன்று உறுதிப் பொருள்களையும் எடுத்துக் காட்டும் வகையில் சிலப்பதிகாரம் அமைந்திருக்கிறது. சிலம்புப் படைப்பின் நோக்கமே அறநெறியின்பாற்பட்டது என்று அடிகள் கூறுகின்றார். கோவலன் வீழ்ச்சிக்குக் காரணமாகப் பொருள் அமைந்திருக்கிறது. ஐந்திணையின்பம், சிலம்பின் பெண் பாத்திரங்கள் அனைவரிடத்தும் அமையப் பெற்றுள்ளது. பேரின்பக் குறிப்பைப் பதிகத்தில் குறிப்பிடுகின்றார்.