பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்

235


வரலாற்றின் ஏடுகளில் போர்ச்செய்திகளே நிரம்பியுள்ளன என்பதே இதற்குச் சான்று. காலப் போக்கில் முடியாட்சிகளை எதிர்த்து மக்கள் கிளர்ச்சி செய்யத் தொடங்கினர். இந்தக் கிளர்ச்சியில் பல அரசர்கள் முடியிழந்தனர்; கொல்லப்பட்டனர். சில அரசுகள் விழித்துக் கொண்டு, மக்களாட்சி முறையைத் தழுவிய ஆட்சியை நடத்தித் தப்பித்துக் கொண்டன. இதற்கு இங்கிலாந்து சிறந்த எடுத்துக்காட்டு. ஆயினும் வரலாற்றுப் போக்கில் நல்லரசுகள் சில அமைந்திருந்தன என்பதை மறக்க இயலாது; மறக்கக் கூடாது. குறிப்பாக இந்தியாவிலும், அதிலும் தமிழகத்திலும் தென் கிழக்கு ஆசியாவிலும் சீனாவிலும் பண்டு நல்ல அரசுகள் இருந்துள்ளன. குறிப்பாகத் தமிழ்நாட்டு அரசுகளில் பல அரசுகள் மக்கள் நல அரசுகளாகவே திகழ்ந்தன. அதனாலேயே அரசை எதிர்த்து மக்கள் கிளர்ச்சி செய்த வரலாறு தமிழக வரலாற்றில் இல்லை. மக்கள் சமுதாயத்திற்கு அரசு இன்றியமையாதது. அரசுக்கு மக்கள் தேவை. ஆதலால், இலக்கியங்கள், குறிப்பாக இந்திய இலக்கியங்கள் அரசியலை மையமாகக் கொண்டே தோன்றி விளங்குகின்றன. கம்பனின் இராமகாதை ஓர் இலக்கியம் மட்டுமல்ல, அரசியல் நெறி விளக்கும் அரசியல் நூலாகவும் விளங்குகின்றது. கம்பனின் இராமகாதையில் இரண்டு பேரரசுகளும் மூன்று சிற்றரசுகளும் பேசப்படுகின்றன என்பது அறிந்ததே. இந்த அரசுகளின் அமைப்பு, செயல்முறை ஆகியனவற்றை ஆய்வு செய்வது ‘எல்லாரும் இந்நாட்டு மன்னர்’ என்று உரிமை கொண்டாடும் இக்காலத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இந்தப் பேச்சு அமைகிறது.

அயோத்திச் சிறப்பு

கோசல நாட்டு அரசு பேரரசு; அதன் தலைநகரம் அயோத்தி. இன்றும் அயோத்தி பழைய வரலாற்றுச் சின்னமாக விளங்கிக் கொண்டிருக்கிறது. நாகரிகத்தில்