பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்

239



‘ஆக கோசல நாட்டில் வறுமைத் துன்பமும் இல்லை, பகைவரால் வரும் துன்பமும் இல்லை என்றால் அயோத்திப் பேரரசு, ஒரு நல்ல பேரரசாக அமைந்து விளங்கியது என்பது புலப்படுகிறது.

கோசல நாடு பேரரசாக விளங்கியது என்பதைக் கம்பன் ‘மன்னவர் தருதிறை அளக்கும் மண்டபம்’ பற்றிக் கூறுவதன் மூலம் உய்த்துணர முடிகிறது. அயோத்தியில் கள்வரும் இல்லை; காவல் செய்வாரும் இல்லை. கொள்வாரும் இல்லை; ஆதலால் கொடுப்பார்களும் இல்லை.

கள்வர், காவலர் இவர்களுள் யார் முதலில் தோன்றினர்? நடைமுறையில் கள்வர் தோன்றின பிறகே காவலர் தோன்றுகின்றனர் என்று சொல்லப்படுகிறது. ஆனால், மனித குலத்தின் பரிணாம வளர்ச்சியை உற்று நோக்கினால் காவலுக்குப் பின்தான் கள்வர் வருகின்றனர். ஆம்! பிறருடைய செல்வத்தையெல்லாம் அழக்கொண்டு இவறிக் கூட்டிப் பிறர் வாட வருந்தப் பூட்டி வைத்து அழகு பார்க்கும், சுரண்டும் வர்க்கத்தைச் சேர்ந்த செல்வர்கள் - செல்வத்தைக் காப்பவர்கள். ‘செல்வத்தின் பயனே ஈதல்’ என்ற நெறி போற்றாமையினால் காவற்காரராகின்றனர். இந்தச் சூழ்நிலையில்தான் கள்வர்கள் தோன்றுகின்றனர். ஆனால் கோசல நாடு குறைவற வளர்ந்த நாடாக விளங்கிற்று.

கோசல நாட்டின் பேரரசர் அன்பில் தாய்; நலம் பயப்பதில் தவம்; விண்ணில் உய்த்துச் செலுத்தும் சேய்; நோய்க்கு மருந்து; அறிவு என்று கம்பன் பேரரசின் புகழ் பாடுவதைக் காப்பியத்தில் படித்து அனுபவிக்க முடிகிறது.

மக்களுக்காகவே மன்னன்

மக்களை உடம்பாகவும் மன்னனை உயிராகவும் கண்டு பாடியது புறநானூறு, ‘மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் ’