பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

244

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கலக்கிறாள் கூனி. பின் மனம் திரிந்த கைகேயி இப்போது பரதனை ‘என் மகன்’ என்று கூறுவதுடன், ‘தன் மகன்’ பரதன் ஆட்சியைப் பெறக் கூனியிடமே ஆலோசனை கேட்கிறாள், திரிந்த சிந்தையளாகிய கைகேயி தசரதனிடம் வரம் கேட்டபொழுது, பரதனை ‘என் செல்வன்’ என்றும், இராமனைச் ‘சீதை கேள்வன்’ என்றும் குறிப்பிடுவதை ஓர்க. ‘இராமனைப் பயந்த எற்கு’ என்று உரிமையுடன் பேசிய கைகேயி, அழுக்காற்றின் வழிப்பட்டு இராமனைச் ‘சீதை கேள்வன்’ என்று குறிப்பிடுவது, மூலம் படிமுறையில் மனந்திரிந்த போக்கினை அறிவது நல்லது.

கூனியின் சூழ்ச்சி தொடக்கத்தில் பலிக்கவில்லை. கடைசியில் கைகேயியின் மனம் மாறுகிறது. கைகேயியின் மன மாற்றத்துக்குக் கூனியின் திறமை காரணமல்ல; அயோத்தியில் இருந்த நிலவரம்-சமூக அமைப்பே காரணம் என்று தெரியவருகிறது. இன்ப துன்ப உணர்வுகளுக்குத் தந்தி சேவகன் காரணம் ஆகான். தந்தியின் செய்தியே காரணமாக அமையும். கோசல நாட்டில் சமூக உத்தரவாதம் இல்லை. அதிகாரம், செல்வம் எல்லாம் பதவியில் உள்ளோரையும் சார்ந்தோரையுமே சென்றடைந்தன - மற்றவர்களுக்கு வாய்ப்பில்லை என்ற நிலவரத்தைக் கூனி கருவியாக்கிக் கொள்கிறாள். இராமனுக்கு முடி சூட்டிவிட்டால் அதன்வழி சொத்துக்களும் அதிகாரங்களும் கோசலைக்குப் போய்ச் சேர்ந்துவிடும். உன் மகன் பரதனுக்கு ஒன்று தேவையானால் நீ, கோசலை இடத்தில் கேட்டுத்தான் பெற வேண்டும். கேகய நாட்டு இளவரசியாகவும், தசரதச் சக்கரவர்த்தி மனைவியாகவும் திகழும் நீ, உனக்கொன்று தேவையானால் கோசலையைக் கேட்டுத்தான் பெறவேண்டும் என்று கூறுகிறாள். தற்சார்பும், பாதுகாப்பும், உத்தரவாதமும் இல்லாத வாழ்க்கையை எண்ணிப் பார்த்த கைகேயி எதிர் காலத்தை நினைவிற் கொண்டு மனம் மாறுகிறாள்.