பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்

247



கோசல நாட்டில் நிலவிய பேரரசின் குறைபாடுகளினாலேயே இராமகாதை நீளுகிறது. கூனியின் துன்பம் மாற்றப்படாமை; தயரதனின் வரம், இராமனுடைய முடிசூட்டு விழாவில் பரதனைப் புறக்கணித்தது ஆகியனவே இராமன் முடியிழந்தமைக்குக் காரணம். காட்டுக்குச் சென்றதற்குக் காரணம் கூனி; கருவி கைகேயி.

கோசல நாட்டு அரசில் குறைகள் காணப்படினும் கோசல நாட்டு அரசு அறம் சார்ந்த அரசு என்பதை மறுக்க முடியாது. கம்பன் தன்னுடைய இலட்சிய நாடாகக் கோசல நாட்டைத்தான் பாடுகின்றான். கம்பனுக்குத் தன்னுடைய இலட்சிய அரசை அமைக்கும் ஆற்றல் அயோத்திப் பேரரசுக்கே உண்டு என்ற நம்பிக்கை போலும். ஆதலால், அயோத்திப் பேரரசில் கம்பன் அரசியலை முறையாகப் பாடுகின்றான். பாத்திரங்கள் பலவற்றையும் - அரசியல் சிந்தனையாளர்களையும் - அரசியல் பேசுபவர்களையும் படைத்துக் காட்டுகின்றான். கம்பனின் அரசியலறிவு அயோத்தியா காண்டத்தில் பூரணமாக வெளிப்படுகிறது. அயோத்தி அரசில் கம்பன் அரசியல் கோட்பாடுகளையும் வலியுறுத்துகிறான். கம்பன் தன் இராமகாதையில் ஒரு நல்ல ஆட்சியமைந்த நாட்டை உருவகம் செய்து காட்டுகிறான்.

மிதிலை அரசு

அடுத்துக் காணப்படும் அரசு மிதிலை அரசு. மிதிலை அரசைப் பற்றி விரிவான செய்திகள் இல்லை. மிதிலை அரசு புகழ்மிக்க அரசு, மிதிலை அரசன் சனகன் இராமகாதையில் பேசப்படுகிறான். சனகனை ‘ராஜரிஷி’ என்று கூறுகிறார்கள் சிறந்த அறிஞர்கள். சனகன் வரலாற்றிலும் புகழ்பெற்றவன். சனகனின் தலைநகரம் மிதிலை. செல்வச் செழிப்பின் காரணமாக மிதிலையில் தெருக்களில் ஆடவரும் மகளிரும் வெறுத்துப்போட்ட பொன்னணிகள் குவிந்து கிடந்தன. மிதிலை நகரத்து இளைஞர்கள் வெஞ்சினமே உருவு