பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

248

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கொண்டனையர். ஆயினும் வேண்டுவார்க்கு வேண்டுவன ஈயும் நெஞ்சினையும் பெற்றிருந்தனர். அகழியும் அரணும் ஓங்கி உயர்ந்த மாடங்களும் அமைந்தது மிதிலை என்று கூறுவதால், மிதிலை செல்வ வளத்தில் சிறந்திருந்தது என்பது புலனாகிறது.

கங்கைக்கரை அரசு

இராமன், தந்தையின் ஆணைப்படி முடி துறந்து வனத்தில் பயணம் செய்யத் தொடங்கினான். இராமன் பயண வழியில் கங்கைக் கரையை அடைகின்றான். கங்கைக் கரையின் வடகரையில் இரவு தங்குகின்றான். உடன் சீதையும் இலக்குமணனும் உள்ளனர். கங்கைக் கரையில் வேடுவகுல அரசு ஒன்று அமைந்திருந்தது. அதன் தலைவன் குகன். ஆயிரம் படகுகளுக்கு உரிமை உடையவன். ஆழ நீர்க் கங்கை போல் நெடிய உருவினன்; நெடுந்தானை உடையவன்; முரட்டு வடிவினன்; சினம் இல்லாத போதும் அவன் நெருப்பைப் போன்ற கண்ணினன்; கையில் வில்லும் இடையில் வாளும் கொண்டவன். ‘குகன்’ என்றும் ‘கங்கை நாவாய்க்கு இறை’ என்றும் கம்பன் இவனைக் குறிப்பிடுகின்றான்.

இவன் இராமனைக் காணும் விருப்பினனாய்த் தேனும், மீனும் திருத்தி எடுத்துக் கொண்டான். இராமனைக் காண நெடுந்தானை சூழச் சென்றான். குகனுடைய சுற்றம் உடன் வந்தது. இராமன் இருக்கும் இடத்தை அண்மித்த வுடன் நெடுந்தானையையும் சுற்றத்தினையும் உடன் வராதவாறு நிற்கப் பணித்தான். அதுமட்டுமல்ல, தன்னிடமிருந்த வில்லையும், வாளையும் ஒதுக்கிவிட்டுத் தனிமையில்-தனி மனிதனாகக் கருவிகள் சுமக்காத உடலையும் இராமன்பால் கொண்ட அன்பு நெஞ்சத்தினையும் சுமந்துகொண்டு, இராமன் இருக்கும் இடத்திற்குச் செல்கின்றான் குகன். போர்க் குகன், ஆயிரம் நாவாய்க்குரிய தலைவன். ஆயினும்