பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்

255


பொருட்டால் எய்தும் மாந்தர்க்கு மரணம் (அரசியற்படலம்- 12) என்று கூறுகிறான். இதற்கு வாலியும் தயரதனும் சான்றாவர் என்பது உணர்க. நமது தலைமுறையில்கூட இத்தகு நிகழ்வுகள் உண்டு. பரபரப்பான உலகம் ஆதலால் நினைவில் தங்கவில்லை. மக்கள் மறந்து போயினர். ‘தாய் ஒக்கும் அன்பில்’ என்று முன்கூறிய கம்பன் இங்கு இராமன் வாயிலாகத் தம்மைத் தாங்கி நிற்பாரைத் தாங்குதல் வேண்டும் அதாவது யாதொரு துன்பமும் வராது பாதுகாத்தல் வேண்டும் என்று அறிவுரை கூறுகின்றான். நாடாள்வோருக்கு அறமே உயிர் உறுதி, ஆக்கம்; பயன். அறம் கெடுமாயின் நாடாள்வோர் வாழ்நாள் கெடும். அவர்களுக்கு அறமே கூற்று. கோவலனைக் கொன்ற பாண்டியன் நெடுஞ்செழியன் வரலாற்றை நினைவிற் கொள்க.

ஆக, கிட்கிந்தை அரசில் அரசின் வடிவம் இருந்தது. வலிமை இருந்தது; படை வலிமை இருந்தது; ஆயினும் உட் சண்டைகள் இருந்தன; அறம் மெலிந்து இருந்தது. இதற்குக் காரணமாகிய வாலியின் வதைக்குப்பின் கிட்கிந்தை அரசு நிமிர்ந்து நிற்கிறது. கிட்கிந்தை நாட்டுக்கு அரசன் சுக்கிரீவன். ஆனாலும் அந்நாட்டு அரசு நிலைபெற்று உயர அனுமனும் அங்கதனுமே கருவிகள் என்பது காவியம் உணர்த்தும் உண்மை.

இலங்கை அரசு

கடைசியாக நாம் காண இருப்பது இலங்கைப் பேரரசு. இலங்கைப் பேரரசு சிறந்த முறையில் இயங்கியது என்று கருதுவோரும் உண்டு. ‘இல்லை, இல்லை! இலங்கை அரசு அரக்கத் தன்மையுடையது’ என்று கூறுவோரும் உண்டு. எது எப்படியாயினும் இலங்கை அரசு, பேரரசு, வலிமை வாய்ந்த அரசு இலங்கை அரசின் தலைநகர் அமைப்பை இராமனே கண்டு வியப்புற்றான் என்று கம்பன் பாடுவது, இலங்கையில் இருந்த அரசு பேரரசு என்பதை உறுதி செய்கிறது.