பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்

259


முறையன்று, காமமும் மானமும் ஓரிடத்தில் இருத்தல் இயலாது, என்றெல்லாம் கடிந்து கூறுகின்றான். ஆதலால், திருக்குறள் அரசியலில் கூறுவதுபோல, மடவார் கற்புக்கு அரசு காவலாக விளங்கவேண்டும். அங்ஙனம் இன்றி ஆள்வோரே மற்றவர் மனைவியைச் சிறையில் வைப்பாராயின் அவ்வரசு எங்கனம் நல்லரசாக விளங்க முடியும்? என்பது கும்பகருணன் வினா.

வீடணன் இராவணனை எங்ஙனம் மதித்தான், உறவு கொண்டான் என்பதை,

“எந்தை நீ ;யாயும் நீ; எம்முன் நீ; தவ
வந்தனைத் தெய்வம் நீ; மற்றும் முற்றும் நீ;
இந்திரப் பெரும் பதம் இழக்கின் றாய்!” என
நொந்தனென் ஆதலின் நுவல்வது ஆயினேன்”.

(கம்பன்-6143)

என்ற பாடலால் அறியலாம். இவ்வளவு பெருமதிப்பை வீடணன் இராவணனிடம் கொண்டிருந்தாலும் இராவணன் சீதையைக் கவர்ந்த செய்கையைக் கண்டிக்கத் தவறவில்லை. அதுமட்டுமன்று, இராவணனையே துறந்து விடுகின்றான். கும்பகருணன் செஞ்சோற்றுக் கடன் அடிப்படையில் பொருகளத்தில் போரிட்டு உயிரிழக்கிறான்.

இந்திரசித்து அறிவுரை

இராவணனை அவனுடைய மகன் இந்திரசித்துவும் இடித்துக் கூறுகின்றான். ஆனால், இராவணன்தான் திருந்தவில்லை. இராவணனுடைய உரிமைச் சுற்றத்தினராகிய கும்பகருணன், இந்திரசித்து ஆகியோர் இராவணன் சீதையைச் சிறைப்படுத்தியிருப்பது தவறு மட்டுமன்று, அறநெறி பிறழ்ந்த பாவமும் ஆகும் என்று உணர்ந்திருந்தனர், இராவணனுக்கும் உணர்த்தினர். ஆனால், இராவணன் திருந்தியபாடில்லை. இவர்களுக்கு உறவா? அறமா?