பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

262

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அதிகம் இருந்ததில்லை. ஆனால், சமுதாய அமைப்பு உருவாகி இருந்தது என்று நம்ப இயலவில்லை. நம்முடைய புராணங்களைப் படித்தாலே தெரிகிறது - சமுதாய அமைப்புத் தோன்றவில்லை என்பது. தேவர்களுக்குள்ளேயே சண்டை, தேவர்களுக்கும் அசுரர்களுக்குமிடையில் சண்டை, கடவுள்களுக்கிடையில் சண்டை நடந்ததாகக் கூடப் புராணங்கள் கூறும். கிரேக்க ஞானி சாக்ரட்டீஸ் நமது பிள்ளைகளுக்குக் கடவுள் போட்ட சண்டைகளைக் கற்றுக் கொடுக்கக் கூடாது என்றான். ஆம்! இந்தச் சமுதாய அமைப்பில் மனிதர்கள் ஒன்றாகச் சேராமல் நாடு, மொழி, மதம், இனம், சாதி முதலியவற்றின் பெயரால் பிரிந்து பிரிந்து தம்முள் பொருதுச் சீரழிந்து போயினர்.

அலைகடலில் தண்ணீர் வெள்ளம், பல கோடிக் கணக்கான திவலைகளையுடையது. அந்தக் கோடிக் கணக்கான நீர்த் திவலைகள் ஒன்றாக இருக்கும் வரையில் கடலுக்குக் கடலின் வடிவம், தண்மை, முத்து ஈனும் பண்பு உண்டு. ஆனால், அக்கடலிலிருந்து ஒரு துளித் தண்ணீர் பிரிந்து கரையில் வீழ்ந்தால் அந்தத் துளிக்கு என்ன நேரிடும்? ஒரு சில நொடிகளுக்குள்ளாகவே கதிரவன் ஒளியில் காய்ந்து மறைந்து போகும். அதுபோல மனிதன் பலருடன் கூடிச் சமுதாயத்தின் ஒரு பகுதியாகப் பிரிக்கப்பட முடியாமல் - பிரியாமல் - வாழ்ந்தால் சமுதாயம் அமையும்; சமுதாயம் உருவாகும். மனிதக் கூட்டம் சமுதாயமாகாது. இலட்சிய அடிப்படையும் உறவும் இன்றிக் கூட்டமாகக் கூடும் மனிதக் கூட்டம்! அவ்வளவு தான். கூட்டம் வேறு, கூடி வாழ்தல் வேறு. கூடி வாழ்தலே சமுதாயம்.

இப்படிக் கூடி வாழும் பண்புடைய மக்களையே பாவேந்தன் பாரதிதாசன்.

“பாரடா உனது மானிடப் பரப்பைப்
பாரடா உன்னுடன் பிறந்த பட்டாளம்