பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

276

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பார்ப்பனன் பேராசை காரணமாக இராமன் சுழற்றி எறிந்த கம்பு, மேலும் தூரம் கடந்து விழவில்லையே என்று கவலைப்பட்டதை இராமன் கண்டு நகைத்தானாம். இது சீதை, அசோகவனத்தில் நினைந்து அழுத செய்தி. இந்த நிகழ்ச்சியின் மூலம் ‘கொள்வார் இலாமை, கொடுப்பார்களும் இல்லை என்பதும்; எல்லாரும் எல்லாப் பெருஞ்செல்வமும் எய்துதல் என்பதும் கம்பனின் இலட்சியமே என்று தெரிகிறது. அது இந்த மண்ணில் எப்படி நடக்கும்? எப்போது நடக்கும்?

அடுத்து, ‘கள்வர் இலாமை, காவலும் இல்லை’ என்று கம்பன் கூறுகின்றான். களவு வந்து காவல் வந்ததா? காவல் வந்து களவு வந்ததா? பரிணாம வளர்ச்சியின்படி பார்த்தால் காவலைத் தொடர்ந்துதான் களவு வந்திருக்கும். மற்றவர்களுக்குப் பயன்பட வேண்டிய பொருளைப் பூட்டி வைத்துக் காவல் காக்கின்றனர். தேவைப்படுவோர் எடுத்துக் கொள்கின்றனர். இதனை உலகியலில் களவு என்று கூறுகின்றனர். ஆனால், தமிழக வரலாற்றின் தொன்மைக் காலத்தில் களவு இருந்ததில்லை. சீன யாத்திரிகர்கள் பாஹியான், ஹவான்சுவாங் போன்றவர்கள் ‘தமிழ் நாட்டில் வீடுகள் திறந்து கிடந்தன. நள்ளிரவில் பயமின்றி மக்கள் நடமாடினர்’ என்று தங்களுடைய யாத்திரைக் குறிப்புக்களில் எழுதியுள்ளனர். களவும் காவலும் இலாதநாடு கோசலநாடு என்பது பெருமைக்குரிய செய்தி. வறுமையுடையோன் பொருளைப் போற்றி வாழ்வான். வறுமையுடையோன் தனக்குரிய நன்செய் நிலம் சிறிதே எனினும் வளமாகப் பேணி வைத்து விளைவு கண்டு வாழ்வான். ‘வறிஞன் ஓம்புமோர் செய் யெனக் காத்து’ என்பான் கம்பன்.

இந்தியா ஏழைகள் நிறைந்த நாடு. வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்பவர்கள் எண்ணிக்கை 58.9% ஆயினும் இந்த நாட்டின் தரிசு நிலம் ஏராளம். வீட்டுப்புறத் தோட்டத்தைப் பயன்படுத்துவோர் மிகமிகக் குறைவு.