பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்

277


நிலத்தின் மண் வளத்தைப் பாதுகாத்தால் நாடு வளம் கொழிக்கும். இன்று கோதுமை, சர்க்கரை, எண்ணெய் முதலியன இறக்குமதி செய்யப்படுகின்றன. ஏன்? நமது நாட்டில் விளைவிக்க இயலாதா? இயலும்! ஆனால் போதிய முயற்சி இல்லை.

கம்பன் ‘தவமும் முயற்சியும் வேண்டும்’ என்றான், வாழ்க்கை பயனுடையதாதல் முயற்சியினாலேயாம். முயற்சியினாலேயே வாழ்க்கையின் மதிப்பு உயர்கிறது. இரும்பைக் காய்ச்சி உருக்கி அடித்தால் அதன் விலை மதிப்புக் கூடுகிறது. அது மட்டுமல்ல, அந்த இரும்பு துருப்பிடித்து அழிந்து போகாமலும் பாதுகாக்கப்படுகிறது. அதுபோலத்தான் முயற்சியின் விளைவாக, பயனாகத் துன்பங்களையும் துயர்களையும் ஏற்றுக் கொண்டு தொடர்ந்து உழைப்பவர்கள் மாமனிதர்களாகிறார்கள்; சாதனை செய்தவர்களாகிறார்கள். வரலாற்றில் இடம் பெறுகிறார்கள். முயற்சியில் ஈடுபடாதவர்கள் செத்துப் பிழைப்பதற்கே தொழிலாகிச் சாகின்றனர். வாழ்க்கை என்பது போராட்டம்! இந்த போராட்டத்தில் அக்கறையும் முயற்சியும் உடையவன் வீழ்ந்து விட்டாலும் தரையில் மோதிய பந்து போல் மீண்டும் எழுந்து விடுவான். முயற்சியில்லாதவன் கோழை. வீழ்ச்சியடைந்தால் மண் உருண்டை போல உடைந்து மண்ணோடு மண்ணாகி விடுவான்.

தவத்தின் சின்னம்

தவத்தின் சின்னமாக விளங்குபவன் இராமன். ஆம்! முடியைத் துறந்தபோதும் அப்பொழுதலர்ந்த செந்தாமரை போன்றிருந்தான். ‘என் பின்னவன் பெற்ற பெருஞ் செல்வம் அடியேன் பெற்றதன்றோ’ என்றும், ‘மன்னவன் பணியன்றாகில் நும் பணி மறுப்பனோ?’ என்றும் கூறி உவகையுடன் காட்டிற்குள் புகுந்தானே! இது தவம் அல்லவா?