பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

280

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இனங்கள் அழிக்கப்பட்டே விட்டன. நமது நாட்டில் போர்கள் நிறைய நடந்தன. ஆயினும், நமது அரசர்கள் நடத்திய போர் முறையில் நெறிமுறைகள் பின்பற்றப்பட்டன. இராமகாதையில் பல போர்கள் நிகழ்ந்துள்ளன. எல்லாப் போர்களும் அறநெறிப் போர்களேயாம். போருக்கு முன்பு தூது அனுப்புவது மரபு. தூதில் உடன்பாடு ஏற்படாவிட்டால்தான் போர். போரும் குறித்த காலத்தில், குறித்த களத்தில் நடைபெறும். இரவில் போர் நடக்காது. இந்தப் போர்களினால் பொது மக்களுக்கு எந்தவித ஆபத்தும் இல்லை; துன்பமும் நேராது.

அனுமன் தூது

தமிழ் இலக்கியங்களில் வரும் தூது பற்றிய பகுதிகள் அறநெறிக் களஞ்சியங்கள். இராமகாதையில் இலங்கைப் பேரரசன் இராவணனுக்கு அனுப்பப் பெற்ற முதல் தூதுவன் அனுமன். காப்பிய அமைப்புப்படி நோக்கினால் அனுமன் சீதையைத் தேடிப் போனவன்தான். இலங்கையில் நடந்த நிகழ்வுகளே அவனைத் தூதுவனாக்கியது. இராவணன் முன் அனுமன் துதுவனாக அமர்ந்து பேசுகின்றான். உலக வரலாற்றில் தீமை ஒரு பொழுதும் நன்மையையோ, வெற்றியையோ பெற்றதில்லை. வெற்றி பெற இயலாது. பொருளையும், காமத்தையும் அனுமன் இருள் என்று குறிப்பிடுகின்றான். வாழ்க்கையின் தெரிவு ஈதலும் அருளுமேயாம். அனுமன் கடைசியாக இராவணனை எச்சரிக்கை செய்கிறான்:

“ஆத லால்தான் அரும்பெறல் செல்வமும்
ஒது பல்கிளையும் உயிரும் பெற,
‘சீதையைத் தருக’ என்று எனச் செப்பினான்
சோதியான மகன் நிற்கு” எனச் சொல்லினான்.

(கம்பன் - 5910)

என்பது கம்பன் பாடல்.