பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்

285


விடை தெரிந்து கொள்வது நல்லது. அதனால் நாம் இந்தியா-பாகிஸ்தான் சண்டையை வரவேற்பதாகப் பொருள் கொள்ளக் கூடாது. நமது விருப்பம் வேறு.

இரண்டாவது உலகப் போரில் வல்லரசுகளால் பிரிக்கப்பட்ட கிழக்கு ஜெர்மனிக்கும், மேற்கு ஜெர்மனிக்கும் இடையில் இருந்த சுவரை இன்று இடித்து விட்டு, ஒரே ஜெர்மனி நாடாக்கியுள்ளனர். அதுபோல, எதிர்காலத்தில் இந்திய இளைஞர்களும் பாகிஸ்தானின் இளைஞர்களும் ஆவேசத்துடன் சேர்ந்து இந்தியாவையும் பாகிஸ்தானையும் ஒரு நாடாக்க வேண்டும். இது எதிர்காலத்தில் நடக்கும். இது வரலாற்றின் தேவை. ஆதலால், பகை மூட்டமும் அச்சமும் இல்லாத, நம்பிக்கையும் நல்லெண்ணமும் உடைய ஒரு சமுதாயமாக மனித குலம் உருப்பெற்று ஆர்த்தெழ வேண்டும். புத்துலகம் படைப்பதை இலட்சியமாகக் கொள்ள வேண்டும்; விண்ணின் ஆட்சியை மண்ணில் காண வேண்டும்.

இதயம் சுருங்கியது ஏன்?

மனிதனிடத்தில் பண்டங்களைப் பணமாக மாற்றுதல், பணத்தை நிலையான சொத்தாக மாற்றுதல், சொத்துக்களைப் பாதுகாக்க அரசு, - ஆதிபத்தியம் தோன்றல் எனப் படிப்படியாக வளர்ந்த நிலையில், அறிவு வறண்டு இதயம் சுருங்கியது. மனிதன் எதையும் செய்து எப்படியாவது தன்னுடைய நிர்வாணமான சுயநலத்தை நிறைவேற்றிக் கொள்ளத் தலைப்பட்டான். இரக்கம் என்ற ஒன்று இல்லாதவர்களாக மக்கள் வளர்ந்து வந்தார்கள். விலங்கும் கூடக் கூட்டமாகக் கூட்டி வைத்துப் பழக்கினால், பழக்கத்தின் காரணமாக ஒன்று சேர்ந்து வாழும் இயல்பினவாக வளரும். இங்கனம் ஒரு குரங்கும், பூனையும் இணைந்து வாழும் பாங்கினை அண்மைக் காலத்தில் நாம் பார்த்தோம்; கேட்டோம். ஆனால், மனிதன் பகையுணர்விலும் போரிடும் மனப்பான்மையிலும் வளர்ந்தே