பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

286

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வந்துள்ளான். படிப்படியாகப் போர்க் கருவிகளை ஆற்றல் மிக்குடையவனாக வளர்த்து, இன்று நீர்வாயுக்குண்டு எல்லையில் வந்து நிற்கின்றான்.

பழைய காலத்துப் போர்களில் உலகம் முற்றாக அழிந்த நிலை இல்லை. ஆனால், இக்காலப் போர்களில் உலகம் அழிந்து விடுவது மட்டுமல்ல - பல தலைமுறைகளுக்கு உறுப்புக் குறைவாகக் குழந்தைகள் பிறக்கின்ற கொடிய நிலை உருவாகி வருகிறது. இரண்டாவது உலகப் போரில் ஜப்பானுக்கு ஏற்பட்ட இழப்புக்கள் அளப்பரியன. ஹிரோஷிமா, நாகசாகியின் இடிபாடுகளைக் காணின் கல்நெஞ்சும் கரையும். இந்த உலகில் இதுவரை 50,000 போர்களுக்கு மேலாக நடந்துள்ளன. பல ஆண்டுகள் தொடர்ந்து நடந்த போர்களும் உண்டு.

போர்மயமான வரலாறு

போர்களை மையமாகக் கொண்டு காவியங்கள் இயற்றியவர்களில் புகழ் பெற்றவர்கள் வால்மீகி, வியாசர், கிரேக்கக் கவிஞர் ஹோமர், மில்டன் முதலியோர். இந்தப் போர்கள் கற்பனைகளல்ல; நடந்தவை. இராம காவியத்தைப் போல, பாரதம் போல, இலியாட்டில் வரும் டிராய் சண்டை அறப்போர் அன்று. சூது நடத்தி வெற்றி பெற்றது ஸ்பார்ட்டா நாடு. சர்வதேச அரங்கில் மராத்தான் ஓட்டம் என்று ஒன்று நடப்பது அனைவருக்கும் தெரியும். மராத்தான் ஓட்டம் 42 கி. மீ ஓட வேண்டும். இந்த மராத்தான், ஒரு பந்தய வீரன் பெர்ஷிய நாட்டுக்கும் கிரேக்க நாட்டுக்கும் நடந்த சண்டையில் கிரேக்கர்கள் பெற்ற வெற்றியைச் சொல்ல ஓடி வந்தவன். அதனால் மராத்தான் ஓட்டம் என்று பெயர் பெற்றது. இங்ஙனம் வரலாற்றில் இடம் பெற்ற போர்கள் ஆயிரக்கணக்கில் உண்டு. கிரேக்க நாடு நகரப் பேரரசுகள் உடையதாகும். அதிலும் குறிப்பானது ஏதென்சு. அது ஏராளமான போர்களைச் சந்தித்து வெற்றி பெற்றிருக்கிறது.