பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்

295


பின்பும் ஆத்திரத்தில் சுக்கிரீவனை அடித்து விரட்டுகின்றான். சுக்கிரீவனின் மனைவி உருமையையும் கவர்ந்து கொள்கின்றான். வாலி, சந்தேகப் பிராணியாகவும் ஆத்திரக் காரனாகவும் விளங்கினான். மேலும் தன்னை யாரும் வெல்லாமல் இருக்கும்படிப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் தவம் செய்து வரம் வாங்கிக் கொண்டிருக்கிறான். அது என்ன வரம்? வாலியுடன் பொருதுகின்றவர்களின் பலத்தில் பாதி பலம் வாலியைச் சேர்தல் வேண்டும்; வாலிக்கு உரிமையாதல் வேண்டும். இப்படி ஒரு வரம்! நமது வழிபடும் கடவுள்களுக்கும் இத்தகைய வரங்களைக் கொடுப்பதுதான் வேடிக்கை, முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும். முள்ளை எடுக்கப் பயன்படும் முள்வாங்கி முள்ளைப் போல் கூர்மையாகவே இருப்பதை அறியாதார் யார்? ஆதலால், வாலியிடம் பேசவேண்டிய அவசியமோ சூழலோ இராமனுக்கு எழவில்லை. காரணம் பேச்சுக்களின் எல்லைகளைக் கடந்த நிலையில் வாலியின் செயல்முறைகள் அமைந்து விட்டன. ஆதலால்.

வாலியின் பொருந்தாச் செயல்களையும் வரத்தையும் முறியடிக்க வேண்டிய நிலையில் மறைந்து நின்று அம்பெய்கின்றான். வாலியை மறைந்து கொன்றதில் ஒரு குறையும் இல்லை; ஒரு குற்றமும் இல்லை. அதனால் இராமன் மறைந்து நின்று கொன்றான் என்று சொல்லப்படுவது முறையல்ல. ஆனால், காவியப் போக்கில் அப்படித்தான் உணர்த்தப்படுகிறது.

அடுத்து நடந்த பெரிய போர் இலங்கையில் நடந்த இராம-இராவணப் போர். போருக்கு முன்பு மரபுப்படி இராமன், விபீடணன், சுக்கிரீவன் ஆகியோருடன் ஆலோசனை செய்யப் பெறுகிறது. முதலில் போர் முறைப்படி இராவணனுக்குத் தூது அனுப்ப முடிவு செய்யப் பெறுகிறது. தூதனாக அனுப்ப வாலியின் மகன் அங்கதன் தேர்வு செய்யப் பெற்றான். வாலி, இராவணனைத் தனது வாலில்