பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

296

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கட்டிச் சுற்றி வந்த மாவீரன்! அதனால் போலும் அவன் மகன் அங்கதன் தூதனாகத் தேர்வு செய்யப் பெற்றான்! அங்கதன் இலங்கையை அடைகின்றான். தான் தூதனாகத் தேர்வு செய்யப் பெற்றதில் அளவற்ற மகிழ்ச்சி அங்கதனுக்கு! அதனால்,

“மாருதி அல்லன் ஆகின்,
நீ” எனும் மாற்றம் பெற்றேன்:
யார் இனி என்னோடு ஒப்பர்
என்பதோர் இன்பம் உற்றான்.

(கம்பன்-6986)

தூதன் அங்கதன், தன்னுடைய தலைவன் இராமனைப் பற்றி இராவணனிடம் புகழ்ந்து பேசுகின்றான்; ‘இராமன், ஐம்பூதங்களுக்கும் தலைவன்: உலகத்திற்குத் தலைவன்; சீதையின் கணவன்; தேவ தேவன்: வேதநாயகன் ! இராவணா! நீ பயின்ற வேதங்கள் தேடும் தலைவன் இராமன், கல்வி அறிவு ஊழின்முன் நிற்பதில்லை. அந்த ஊழ்வினையை உய்த்துச் செலுத்தி ஊட்டுவிக்கும் தலைவன்; ஊழித் தலைவன். அவனுடைய தூதன் நான்” என்கிறான் அங்கதன்.

இராவணன் அங்கதனை நோக்கி அவனுடைய வரலாற்றைக் கூறும்படிக் கேட்கின்றான். அதற்கு அங்கதன் முற்காலத்தில் இராவணன் என்பானைத் தன் வாலில் கட்டிச் சுருட்டிக் கொண்டு, பல மலைகளையும் தாண்டிச் சுற்றி வந்த இந்திரன் மைந்தன் வாலியின் மகன் என்றனன். உடன் இராவணன் அங்கதனுக்கு வானர ஆட்சியைத் தருவதாக ஆசை வார்த்தை கூறுகின்றான். உன் தந்தை வாலியைக் கொன்றவன் பின் திரிதல் - சுற்றுதல் அழகன்று; இராமனிடமிருந்து பிரிந்து விடு என்னைச் சேர்க; நான் உன்னை என் மைந்தனாக ஏற்றுக் கொள்கிறேன்!’ என்று இராவணன் அங்கதனிடம் பேசி, வாலியைக் கொன்றவன் இராமன் என்ற வாயில் வழிப், பகை மூட்ட எடுத்த முயற்சி