பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்

299


அனுப்பி வைப்பான் என்று இராமன் நம்பி இருக்கக் கூடும். இராமனது நம்பிக்கை முற்றிலும் நிறைவேறாது போனாலும் ஓரளவு பயன் தந்தது.

திசை யானைகளை வென்ற வலிமை, சிவம் உறையும் கயிலை மலையைப் பெயர்த்தெடுக்க முயன்றதோள் வலிமை, நாரதர் மகிழ இனியன கூறிய நாவாற்றல்; சிவபெருமான் அருளிய வாள்; வாகை மாலைகள் சூடியிருந்த பத்து மணி முடிகள்; இவையெல்லாவற்றுடன் தன் வீரத்தையும் சேர்த்து இராவணன் போர்க்களத்தில் போரிட்டு வெறும் ஆளாக இலங்கையினுள் நுழைந்தான். தோல்வியின் காரணமாக நாணித் தலைகுனிந்தவாறே, தனியே இலங்கையினுள் புகுந்து தனது மாளிகையை அடைந்தான். இராவணனுடைய நாணமும். சீதை நகைப்பாளே என்ற அடிப்படையில் அமைந்த நாணமேயாம் என்று கம்பன் கூறுவது நகைச்சுவை நிறைந்த கருத்து. ஆம்! இந்த உலகில் ஆடவர் பலரும் தமது செயலின்மை கருதி நாணப்படுதல் பெரும்பாலும் இல்லை. பெண்கள் பரிகசிப்பார்களே என்ற அச்சமும் நாணமும் தான் ஆடவர்களுக்கு மிகுதியும் உண்டு. இதற்கு இராவணனும் விதிவிலக்கல்லன்.

கும்பகருணன் அறிவுரை

இராவணன், போரில் தோல்வியைத் தழுவியதைக் கண்ட அரக்கர்கள், நெடுந்துயில் கொண்டிருந்த கும்பகருணனை எழுப்பினார்கள். கும்பகருணன் துயில்விட்டு எழுந்ததும் இராவணன் அவையை அடைந்து இராவணனுக்கு அறிவுரை கூறினான். சீதையை விடுதலை செய்யும்படி அறிவுறுத்தினான். விபீடணனுடன் கலந்து உறவாடி வாழ்க என்றான். இந்த இடத்தில் கம்பன் விபீடணனுக்குத் தந்துள்ள அடைமொழி அல்லது இலக்கணம், சிந்தனைக்குரியது. ‘ஐயறு தம்பியோடு அளவளாவுதல்’ என்று கம்பன் குறிப்பிடுகின்றான்.