பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்

301


வெற்றி பெறுவது உறுதியல்ல. சாவையே தழுவி நிற்பேன். என்னை இராம-இலக்குவர் வெற்றி பெற்றுவிட்டால் உன்னை எளிதில் வெற்றி பெறுவர். ஆதலால், என் மரணத்திற்குப் பிறகாவது சீதையை விட்டுவிடு! அது உனக்கு நன்மை: தவமும் ஆகும் என்று கூறி இராவணனிடம் விடை பெற்றுக் கொண்டு போருக்குச் செல்கிறான்.

கும்பகருணன் – விபீடணன் சந்திப்பு

போர்க்களத்தில் விபீடணன் கும்பகருணனைச் சந்திக்க வருகின்றான். கும்பகருணன் விபீடணன் வந்தமையை ஏற்கவில்லை. ‘குலத்தில் இழுக்கின் வழி விளைந்த விளைவா?’ என்று விமர்சிக்கின்றான் கும்பகருணன், அழிவுக்காலம் வந்தால் அழிவுக்குரிய பலவும் ஒருங்கு கூடி வரும் போலும்!

‘ஏந்திய வில்லுடன் இராமன் நிற்கிறான். அவன் அருகில் வெல்லுதற்கரிய இலக்குவன் நிற்கிறான். எமனும் நிற்கிறான்; ஊழ்வினை உருத்து வந்து நிற்கிறது. எங்கள் தோல்வி உறுதி. இந்தச் சூழ்நிலையில் ஏன் வந்தாய்?’ என்பது கும்பகருணன் வினா! விபீடணன், கும்பகருணனை அறநிலை கருதி, இராமன்பால் வந்து சேரும்படியும் இலங்கை ஆட்சியை ஏற்கும்படியும் அழைக்கின்றான், நிலந்தோய வணங்கிக் கேட்டுக் கொள்கின்றான். கும்பகருணன் - விபீடணன் உரையாடல் ஒப்பற்ற வாழ்க்கைத் தத்துவம். அறத்திற்கும் பாசத்திற்கும் நடக்கும் போராட்டம் பற்றிக் கம்பன் அழகுற, அமைவுற விளக்குவது பலகாலும் படித்துணரத்தக்கது.

கும்பகருணன், போர்க்களத்தில் தனக்கு நேரிடும் மரணம் இழிவானது என்று கூறுகிறான். அதே போழ்து அந்த மரணம் புகழுடையது என்றும் கூறுகிறான். மரணத்தின் காரணத்தால் மரணம் இழிவாகிறது. மரணத்தின் நோக்கத்தைக் கருத்தில் கொண்டால் புகழாகிறது. ஆம்! நன்றியறிதல் என்ற பண்பு உலகத்தில் உள்ளளவும்