பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

308

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இராமனின் மனைவி சீதை என்பதை உறுதிப்படுத்து கின்றான். ‘இன்று போர் முடிவில் இராமனை இழந்து அவன் மனைவி சீதை அழவேண்டும் அல்லது என் மனைவி என்னை இழந்து அழவேண்டும்; இரண்டில் ஒன்று நடக்கும்’. என்று கூறுகின்றான். இராமனும் போர்க்களத்திற்கு வந்து விட்டான். போர் நடந்தது. இராவணன் படிப்படியாக மனம் மாறுகின்றான்; உணர்கின்றான். ஆனால், மாற்றம் தான் ஏற்படவில்லை. இன்றும் மக்களில் பலர், நல்லதை அறிவார்கள்; உணர்வார்கள். ஆனால், துணிவுடன் ஏற்கமாட்டார்கள். செயலாக்கத்திற்குக் கொண்டுவரத் தயங்கித் தயங்கி மற்றவர்களுடைய உறவை இழக்கின்றனர்; வாழ்க்கையை இழக்கின்றனர். இராவணன் இந்த வர்க்கத்தினன் போலும்! இராவணனுடைய சுத்தவீரத் தன்மையைக் கம்பன்,

“ஒல்காப் போர்த் தொழிற்கு அமைவது ஆனான்”

என்று கூறி விளக்குகின்றான்.

செருகளத்தில் நின்ற இராவணனுக்குத் தெளிந்த சிந்தனை அரும்புகிறது; தனக்கு எதிரில் நின்று போரிடுபவன் மனிதன் அல்லன்; பரம்பொருள் என்று உணர்கின்றான்.

‘சிவனோ? அல்லன்; நான்முகன் அல்லன்; திருமாலாம்
அவனோ? அல்லன்; மெய்வரம் எல்லாம் அடுகின்றான்,
தவனோ என்னின், செய்து முடிக்கும் தரன் அல்லன்
இவனோதான் அவ் வேத முதல் காரணன்’ என்றான்.

(கம்பன் - 9838)

இராமன், இராவணனது தலையில் ஒன்றை அம்பினால் கொய்து வீழ்த்துகின்றான். இந்த அரிய பேறு தவத்தினால் மட்டுமே வாய்க்கும். இராவணன் கைகள் வெட்டப்படுகின்றன. தலைகள் வீழ்த்தப்படுகின்றன. இராவணன் மூர்ச்சித்து விடுகின்றான். இராவணன்,