பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

312

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மட்டுமா? நான்முகன், திருமால், சிவன் முதலியோரும் இதற்கு விதிவிலக்கல்லர் என்பது சீதாபிராட்டியின் வாதம்! என் கணவர் இராமனும் ஓர் ஆண் மகன் தானே! அவர் எப்படி என்னை, என்னுடைய உள்ளத்தை, உணர்வினைப் புரிந்து கொள்வார்? பரம்பொருளே! இனி நான் யாருக்கு என்னுடைய கற்புத் தவத்தைக் காட்ட வேண்டும்? இப்பொழுது நான் இறப்பதே நன்று. உமது கட்டளையும் பொருத்தமானதே! இப்போது சாவதே என் கடமை’ என்றாள்.

சீதை, எரியில் மூழ்க ஆயத்தமானாள்; ‘அக்கினி தேவனே! நான் என் மனத்தினாலும் உடம்பினாலும் வாக்கினாலும் என் கற்புக்குக் குற்றம் உண்டாகும்படி நடந்திருந்தால் நீ கோபத்தோடு என்னைச் சுடுவாயாக!’ என்று கூறி இராமனுக்கு வணக்கம் செய்துவிட்டு எரியில் இறங்கினாள் ! ஐயோ, பாவம்! அன்னை சீதா பிராட்டியின் கற்புக்கனலால் அக்கினிதேவன் சுடப்பட்டான்! அதனைக் கம்பன்,

நீந்த அரும் புனலிடை நிவந்த தாமரை
ஏய்ந்த தன் கோயிலே எய்துவாள் எனப்
பாய்ந்தனள்; பாய்தலும், பாலின் பஞ்சு எனத்
தீய்ந்தது அவ் எரி, அவள் கற்பின் தீயினால்!

(கம்பன் - 10037)

என்று பாடுவான்.

தீக்கடவுள் தன்னுள் மூழ்கிய சீதையை எடுத்து வருகின்றான்; வந்து ஆற்றாது புலம்புகின்றான்; கற்புக்கனலியாகிய சீதா பிராட்டியார் வெகுண்டால், ‘இந்த உலகம் அழிந்து விடுமே! படைப்பாளனாகிய நான்முகனும் அழிந்து விடுவான்! வான் மழை பொய்க்கும்! இப்புவிக்கோள் உடையும் ! ஐயனே! சீதா பிராட்டியை ஏற்றருள்க’ என்று வேண்டுகின்றான். தீக்கடவுளின் உரை கேட்ட இராமன் மகிழ்ந்தான். உலகில் தீயே அழிக்க முடியாத