பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்

315


கின்றான். இராமகாதையில் மிக உயர்ந்து விளங்கும் பாத்திரங்களில் கும்பகருணன் ஒருவன். அறநெறியின் பெயரால், உறவை, உடன்பிறப்பை, பரிவை, பாசத்தைத் துறத்தல் கம்பனுக்கு முழு உடன்பாடன்று. காவியம் முழுதும் மனிதம் மேம்பட்டு நிற்கின்றது. ஏன்? கம்பன் தன் புரவலராக விளங்கிய திருவெண்ணெய்நல்லூர் சடையப்ப வள்ளல் பெயரை இடம் தேர்ந்து அமைத்து நன்றி பாராட்டுகின்றான். இராமனுக்கு முடி சூட்டும்போது சடையப்ப வள்ளல் மரபினர் மணிமுடியை எடுத்துக் கொடுக்க வசிட்டர் சூட்டினார் என்பது காவியம். பழங்காலத்தில் முடியெடுத்துக் கொடுக்கும் உரிமை வேளாண் குடியினரிடமே இருந்தது. பின்னர் வணிகர்கள் கைக்கு மாறியது. அடுத்து அடுத்துப் புரோகிதர்கள் கைக்கு மாறியது. கம்பன் காலத்தில் வேளாண்குடி மரபினர் சிறந்து விளங்கியமையை இராமகாதை முழுதும் உய்த்துணர முடிகின்றது.

சகோதர பாசம்

தமிழ்நாடு சிறிய நிலப்பகுதி உள்ள நாடு. ஆயினும் மூவேந்தர்கள், பல சிற்றரசர்கள் இவர்களுக்குள் ஓயாத போர்! தமிழரசர்களின் ஆட்சி மறைந்ததற்குக் காரணம் அந்நியப் படையெடுப்புகள் அல்ல. தமிழ் நாட்டு அரசர்கள் தம்முள் பொருதியே அழிந்து போயினர். அதனால் கோசல நாட்டரசிலும் சரி, இலங்கையிலும் சரி, ஆதிக்கப் போட்டிகள் இல்லை என்று காட்டுகின்றான் கம்பன். கெட்ட போரிடும் கலகம் இரண்டு அரசுகளிலும் இல்லை. இராமகாதையில் பண்பாட்டின் சிகரமாக விளங்கும் பாத்திரம் பரதன். இராமனுடனேயே இருந்தவன் இலக்குமணன். ஆனால், பரதன் இராமனுடன் இருந்த காலம் குறைவே. அந்த நிலையிலும் பரதனின் அன்பு விஞ்சியது. பரதன் இராமன்பால் கொண்ட அன்பு ஆயிரம் இராமன் அன்பிற்கும் மேம்பட்டது. தாயின் ஆணை, தமையன் இராமன் ஆணைகளுக்குப் பின்னும் ஆட்சியை நஞ்சென நினைத்தான்; முடி சூட்டிக் கொள்ள மறுத்தான்;