பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

326

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தினம் உனக்கு முடிசூட்ட முடிவு செய்து வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து வருகிறேன். பரதன் இங்கு இல்லாத நாளே உன் முடிசூட்டுக்கு ஏற்ற நாள். ஆதலால், இன்று இரவு உன்னுடைய நண்பர்களோடு ஜாக்கிரதையாக இருந்து உன்னைப் பாதுகாத்துக்கொள். ஏன், இப்படிச் சொல்லுகிறேன் என்றால் பரதனுக்கு வேண்டியவர்களால் உனக்கு ஆபத்து நேரலாம். ஒரு சமயம் பரதனாலும் முடிசூட்டு நிகழ்ச்சி தடைப்படலாம். ஆதலால், ஜாக்கிரதையாய் உன்னைப் பாதுகாத்துக்கொள் என்பதாக தசரதன் சொல்லுகின்றான்” என்று எழுதுகிறார். தலைவர் பெரியார் அவர்களின் இக்கருத்து வான்மீகத்தின் வழியது. இத்துறையில் கம்பன் முற்றிலும் மாறுபடுகிறான். தசரதன் இராமனைக் கூப்பிட்டு இரந்து கேட்கிறான். தன்னுடைய பொறுப்பிலிருந்து தன்னை விடுதலை செய்யும்படி, அங்கு முடிசூட்டும் நாள் பற்றித் தசரதன் குறிப்பிடவில்லை.

“அனைய தாதலின் அருந்துயர்ப்
பெரும்பர மரசன்
வினையின் என்வயின் வைத்தனன்
எனக்கொளல் வேண்ட
புனையு மாமுடி புனைந்திந்த
நல்லறம் புரக்க
நினையல் வேண்டும்யான் இன்வயிற்
பெறுவது ஈதென்றான்”

இதுவே கம்பன் கருத்து. பரதன் இல்லாத நாளாக இருக்க வேண்டும் என்ற செய்தி கம்பனில் இல்லை. மேலும் இராமன், முடிசூட்டிக் கொள்வதற்குக் கடமையுணர்ச்சி யோடு ஏற்றுக் கொண்டானேயொழிய விருப்பத்தோடு ஏற்றுக் கொண்டானில்லை. முடிசூட்டிக் கொள்வதில் இராமனுக்கு விருப்புமில்லை-வெறுப்புமில்லை. தந்தையும்