பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இராமனும் சீதையும்

327


நாட்டின் அரசனுமாக இருக்கின்ற தசரதன் கடமை என்றேவியதை ஏற்றுச் செய்யும் உணர்வுடனேயே ஒத்துக் கொண்டான் இராமன். இதனைக் கம்பன்,

“தாயைப் பரிசுரை செயத்
தாமரைக் கண்ணன்
காத லுற்றில் னிகழ்ந்தினன்
கடனிதென் றுணர்ந்தும்
யாது கொற்றவ னேவிய
ததுசெய லன்றோ
நீதி யெற்கென நினைந்துமப்
பணிதலை நின்றான்

.

-அயோ. 72.

என்ற பாடலில் விளக்குகிறான். இக்கருத்துக்களின்படி இராமனிடத்து எந்தக் குற்றமுமில்லை. மாறாக, குணத்திற் சிறந்தவனாகத் திகழ்கின்றான்.

கைகேயிக்குப் பிறக்கும் மைந்தனுக்கு முடிசூட்டி வைப்பதாய்த் தசரதன் உறுதி கூறியதாகக் கம்பனில் செய்தியில்லை.

தமிழர் பின்பற்றக் கூடிய ஆதார நூல் கம்பனே யொழிய வான்மீகம் அல்ல. தமிழகத்தில் வழங்கிய வான்மீக இராமாயணத்தின் வழுக்களை நீக்கித்தான் கம்பன் தமிழ் நாகரிகத்திற்கேற்றவாறு இராமகாதையைச் செய்தான். தமிழ்நாட்டு மக்கள் இன்று விரும்பிப் படிப்பது கம்ப இராமாயணமே தவிர வான்மீக இராமாயணமன்று. ஆதலால், இத்துறையில் இராமன் தவறு செய்ததாகக் கம்பனும் நினைக்கவில்லை. கம்பனைப் பயில்கின்ற தமிழரும் நினைக்கவேண்டிய அவசியமில்லை.

கைகேயி, இராமனுக்கு முடிசூட்டும் செய்தியை எடுத்த எடுப்பில் மறுக்கவில்லை. மாறாக, மகிழ்ச்சியடைகிறாள்.