பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

328

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இராமனுக்கு முடிசூட்டும் செய்தியைக் கொண்டுவந்த மந்தரைக்குத் தான் அணிந்திருந்த முத்துமாலையைக் கழற்றிப் பரிசாகத் தருகிறாள். கைகேயிக்கும் இராமனுக்கு முடி சூட்டுவதில் உடன் பாடேயாம். பின்னர்தான் மந்தரை யினுடைய-ஆசையூட்டுகின்ற-சூது நிறைந்த சொற்களால் மனம் திரிந்தாள். இதனைக் கம்பன்,

“தீய மந்தரை யிவ்வுரை,
செப்பலுந் தேவி
தூய சிந்தையுந் திரிந்தது
சூழச்சியி னிமையோர்
மாயை யும்மவர் பெற்றுள்ள
வரமுண்மை யாலும்
ஆய வந்தண ரியற்றிய
அருந்தவத் தாலும்”

அயோ. மந்தரை. 77.

என்று பேசுகின்றார்.

‘தூய சிந்தையும் திரிந்தது’ என்ற சொற்றொடர் நினைந்தின்புறத்தக்கது. இக்கருத்தினையே, பின்னர் இராமன் கூற்றாக வைத்துக் கவிஞன் கூறுவது சிந்தனைக்குரியது.

“நதியின் பிழையன்று
நறும்புனவின்மை யற்றே
பதியின் பிழையன்றே
பயந்து நமைப் புரந்தான்
மதியின் பிழையன்று
மகன்பிழை யன்று மைந்த
விதியின் பிழைநீ
இதற்கென்னை வெகுண்ட தென்றான்”

அயோ. நகர்நீங். 134

என்பது பாடல்.