பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

330

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இப்பாடலுக்கு இங்ஙனம் பொருள் காண்பதே முறை. ஆதலால், இராமன் முடிசூட்டிக் கொள்ள விருப்பமுடை யவனாகவும் இல்லை. தனது தந்தையும், நாட்டின் அரசனுமாகிய தசரதனின் ஆணைக்குக் கட்டுப்பட்டு நடத்தல் கடமை என்ற உணர்விலேயே முடிசூட்டிக் கொள்ள ஒப்புக் கொள்ளுகிறான். தசரதன், கைகேயிக்கு அவளிடத்தில் உண்டாகும் புத்திரனுக்கு முடிசூட்டி வைப்பதாகச் சொன்ன செய்தி கம்பனில் இல்லை. கைகேயி பெற்ற வரம், அவள் தசரதனுக்கு மனைவியான பிறகு சம்பராசுரனுக்கும் தசரதனுக்கும் நடந்த போரில் தசரதனுக்குத் திறமையாகத் தேரோட்டி, போரில் அவன் வெற்றிப் பெறக் காரணமாக இருந்தமைக்காவே வழங்கப்பெற்றது. வரம் பொதுப்படையாக வழங்கப்பெற்று, வேண்டிய பொழுது வேண்டியதை அளிப்பதாக அளிக்கப் பெற்றதே தவிர வரம் இன்னது என்று கைகேயியும் கேட்டுக் கொள்ளவில்லை. தசரதனும் குறிப்பிடவில்லை. அயோத்தியா காண்டம் மந்தரைச் சூழ்ச்சிப் படலத்தில் வரும் 81, 82-ஆம் பாடல்கள் இதனையுணர்த்தும்.

கைகேயி, பரதன் நாடாள வேண்டும்: இராமன் காட்டுக்குச் செல்ல வேண்டும் என்று சொன்ன பொழுது இராமன், துறந்தாரில் தூய்மையுடையோனாக-சற்றும் சலனமின்றி மனம் நிறைந்த மலர்ந்த முகத்துடன்,

“மன்னவன் பணியள் றாகின்
நும்பணி மறுப்ப னோவென்
பின்னவன் பெற்ற செல்வம்
அடியனேன் பெற்றதன்றோ
என்னிதின் உறுதி யப்பால்
இப்பணி தலைமேற் கொண்டேன்
மின்னொளிர் கான மின்றே
போகின்றேன் விடையுங் கொண்டேன்”

அயோத். சூழ். 110

என்கிறான்.