பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கம்பன் கண்ட பொதுமைச் சமுதாயம்

339


முயற்சியை விட, அதைக் காக்கும் முயற்சி அருமைப் பாடுடையதாகி விட்டது. ஏன் இந்த அவலம்? களவு முதலில் தோன்றியதா? காவல் முதலில் தோன்றியதா? கள்வர் யார்? பாரதி “பிறர் பங்கைத் திருடுதல் வேண்டாம்” என்று சொன்னபடி பிறர் பங்கைத் திருடுகிறவர்கள் கள்வர்கள். இத்தகைய திருடர்கள் இல்லாத நாட்டில் காவல்காரர்கள் ஏன்? இதனைக்

“கள்வர் இல்லாமைப் பொருள் காவலும் இல்லை”

என்று கம்பன் பாடுகின்றான். கம்பன் பார்வையில் கள்வர் என்பவர் திருடுபவர் மட்டுமல்லர்; பிறர் பங்கைச் சுரண்டுபவர்களும் சேர்ந்தவரேயாம்.

கம்பன் கண்ட நாட்டில் தனியுடைமையர்கள் இல்லை. எங்குத் தனி உடைமைச் சமுதாயம் இல்லையோ அங்கு இல்லாமையும் இல்லை. இதுவே பொதுவுடைமைச் சமுதாயத்தின் அமைப்பு, கம்பன்.

“இல்லாரும் இல்லை; உடையார்களும் இல்லை”

என்று ஐயத்திற்கிடமின்றிக் கூறுகின்றான்.

இன்றும் நம்முடைய நாட்டில் சிலர், பொதுவுடைமைச் சமுதாயம் என்றால் ஏழ்மையைப் பங்குபோட்டுக் கொள்ளுதல் என்று கேலியாகக் கூறுவர். இதற்கும் கம்பன் அன்றே விடை சொல்கிறான். கம்பனின் பொதுவுடைமைச் சமுதாயத்தில் செல்வம் பெருகும். அச்செல்வம் சமநிலையில் எல்லாருக்கும் கிடைக்கும் என்பதை

“எல்லாரும் எல்லாப் பெருஞ் செல்வமும் எய்தலாலே
இல்லாரும் இல்லை உடையார்களும் இல்லை”

என்று பாடுகின்றான்.

கம்பன் ஒரு சிறந்த மானுடக் கவிஞன். மானுடத்தைப் பற்றிப் பாடிய கவிஞன். பாரதி, “கம்பன் என்றொரு