பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதுச்சேரி கம்பன் விழாத் தலைமை உரை

343


கொள்கிறீர்கள் என்று தோன்றுகிறது. தெய்வமாக்கவி என்றால் என்ன? தெய்வம் உண்மைதான் சொல்லும். உண்மை சொல்வதற்குத்தான் தெய்வம் என்று பெயர். தெய்வத்தின் வார்த்தைக்கு மறு வார்த்தை இருக்கக்கூடாது. இது நாம் அனைவரும் நம்புகிற செய்தி. ஆனால் நடப்பில் நம்முடைய நாட்டு மக்கள் தெய்வத்தையும் ஏமாற்றத் தொடங்கிவிட்டார்கள். தெய்வத்தின் முன்னே போனாலும் தெய்வம் விரும்புவதைக் கொடுக்காமல் தன்னிடத்தில் இருப்பது எதையாவது கொடுத்துவிட்டு கொடுத்ததை விடக் கூடுதலாகத் தெய்வத்திடத்தில் பிச்சை கேட்கிறவர்கள் நாட்டில் ஏராளம். கம்பன் என்ற தெய்வமாக்கவியின் சன்னிதியில் நீங்கள் என்ன கேட்கப் போகிறீர்கள் என்பது என்னுடைய கேள்வி.

பொதுவாகச் சென்ற காலம் நம்முடைய வரலாற்றுக்கு மிகச் சிறந்த காலம் என்பதில் இரண்டு விதக் கருத்து இருக்கமுடியாது. ஆனாலும் கடந்த காலம் கடந்த காலந்தான். எப்படி கறந்த பாலை பால் மாட்டு மடிக்குள் திரும்ப நுழைக்க முடியாதோ அதேபோலச் சென்றகால வரலாற்றை திருப்பி நாம் கொண்டு வரமுடியாது. ஆனால் வரலாற்றாசிரியர்கள் சில சமயத்தில் சொல்லுகிறார்கள் “History Repeats itself” என்று.

நான் இந்த ‘புரட்சித்’ தலைப்பைப் பற்றி சிந்திக்கத் தொடங்கிய பொழுது இந்தப் பழமொழியைப் பற்றியும் கொஞ்சம் சிந்திக்கத் தொடங்கினேன். “சரித்திரம் திரும்பி வருகிறது” என்று சிலர் சொல்கின்றனர். அப்படித் திரும்பி வந்தால் அதில் என்ன பயன்? எந்த ஒன்றும் அது இருந்தபடியே இருக்குமானால் அது பயனுடையது அல்லவே. மாற்றமும் வளர்ச்சியும் வேண்டுமே. சரித்திரம் திரும்பி வருகிறது என்று சொன்னால் அதில் என்ன பொருள் என்று நீண்ட நேரம் யோசித்தேன்! பின் நான் இப்படிச் சொல்லலாமா என்று கருதினேன். புதுவையில் தான் முதன்