பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதுச்சேரி கம்பன் விழாத் தலைமை உரை

345


நான் படித்தாலும் சென்ற தடவை படித்ததைவிட புதிய பார்வையில் புதிய கோணத்தில் கம்பனைப் படிக்காது போனால் நான் வறட்சித் தன்மையுடன் கம்பனைப் படிக்கிறேன் என்பது பொருள். இந்தப் பரந்த உலகம் இயங்கிக் கொண்டேயிருக்கிறது, வளர்ந்துகொண்டேயிருக்கிறது. ஒன்று இந்த உலகத்தில் நீங்கள் பார்க்கிற கொள்கைகள் கோட்பாடுகள் நிகழ்ச்சிகள் இவற்றைக் கம்பனில் தேடிப் பாருங்கள் கிடைக்கின்றனவா என்று. இந்த நாட்டினுடைய நிகழ்வுகளுக்கு கொள்கைகளுக்கு கோட்பாடுகளுக்கு கம்பன் ஏதாவது காரணம் சொல்லுகின்றானா என்று கம்பனில் தேடுங்கள். இஃது ஒரு பார்வை. இதில் உங்களுக்கு விருப்பமில்லை என்றால் கம்பனையாவது இந்த நாட்டின் வீதிகளிலே தேடிப்பாருங்கள். இது கம்பன் சொல்வதுபோல இருக்கிறது என்றாவது சொல்லுங்கள்.

உயிர்ப்புள்ள மானுட சமூகத்தின் வாழ்வியலோடு ஒட்டிவராத இலக்கியங்கள் இந்த உயிர்ப்புள்ள மானுட சமூகத்தை உந்திச் செலுத்துகின்ற ஆற்றல் மிக்கதாக இல்லாத இலக்கியங்கள் காலப்போக்கில் தேவலோகத்து அனுபவம் போல அனுபவத்தோடு நின்றுவிடும். நம் நாட்டுப் புராணங்களில் எல்லாம் தேவலோகத்தில் எல்லா அனுபவங்களும் உண்டு என்று சொல்லுவார்கள். காமதேனு உண்டு, கற்பகத்தரு உண்டு என்று சொல்லுவார்கள். ஆனாலும் அவற்றை அறிந்த ஆள்தான் இல்லை.

இந்தப் பார்வையில் கம்பனைப் பார்க்கிறபொழுது புரட்சி என்றால் என்ன? கொஞ்சம் பழைய சமயவாதிகள் புரட்சியைப் பற்றிச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் புரட்சி என்ற பெயரில் சொல்லவில்லை. பிரளயம், யுகப் பிரளயம் என்று சொல்வார்கள். எல்லாமே அடியோடு மாறி ஒரு புது யுகம் தோன்றுவதை யுகப்பிரளயம் என்று சொல்வார்கள். பாரதி கலியுகத்தைக் கொன்றுவிட்டு கிருதயுகத்தைக் கொண்டுவருவேன் என்று சபதம் செய்கிறான். அப்படி