பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

346

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


யானால் என்ன பொருள்? கலியுகம் அவன் வாழ்கிற யுகம். அவன் வாழ்கிற காலம் வாழ்க்கைக்கு ஏற்றதாக இல்லை. எனவே கலியுகத்தைக் கொன்றுவிட்டு கிருத யுகத்தைக் கொண்டுவரவேண்டும் என்கிறான். இந்த யுகப்பிரளயத்தை முன்னே இருந்தவர்கள் எல்லாம் கடவுள் செய்வார் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால் பாரதி முதன் முதலில் தன்னந்தனியனாய் நான் கொணர்வேன் என்று சொன்னான். ஒரு தன்னம்பிக்கை உடைய ஆளுமை உடைய ஒரு ஆவேசக் குரல் கேட்கிறது, கலியுகத்தைக் கொன்று கிருதயுகத்தைக் கொண்டுவரவேண்டுமென்று!

கலியுகத்தினுடைய தன்மை என்ன? புரட்சி என்றால் என்ன? நாம் வாழ்கிற உலகம் நாம் வாழ்கிற சமூக அமைப்பு, நான் இப்படிச் சொல்லும்போது எனக்குக் கொஞ்சம் சங்கடம் தோன்றுகிறது. ஏனென்றால் நம் நாட்டில் தற்போது சமூகம் இல்லை. இன்னமும் நம் நாட்டில் சமூகம் - சமூக அமைப்பு தோன்றவில்லை. நம் நாட்டில் நாமெல்லாம் மக்கள் கூட்டம் அவ்வளவுதான். நீங்கள் காடுகளைப் பார்த்திருப்பீர்கள். காடுகளில் ஓங்கி உயர்ந்து அடர்ந்த மரங்கள் இருக்கும். காடுகள் சமுதாயத்திற்குத் தேவைதான். ஆனாலும் காடுகளைப் பற்றிக் கொஞ்சம் எண்ணிப் பாருங்கள்; அந்தக் காடுகளிலே மரங்கள் ஒழுங்காக இருக்காது. நெறிமுறை இருக்காது. அழகுபட அமைந்து மரங்கள் வரிசையாக இருக்காது. காட்டில் மரங்கள் தன்னிச்சையாகத் தோன்றும். தன்னிச்சையாக வளரும். அந்தக் காட்டிலுள்ள மரங்களுக்கிடையே அருவெறுக்கத்தக்க ஆபாசமான போட்டிகள் இருக்கும். தெளிவாக உண்மையைச் சொன்னால் வல்லாண்மை மிக்க தாவரங்கள் வல்லாண்மை இல்லாத தாவரங்களை ஆக்கிரமித்து அழித்துவிடும். இது காட்டின் இலக்கணம்.

ஒரு பழத்தோட்டம்! ஒரு தென்னந்தோப்பு! இவற்றைக் கூர்ந்து பாருங்கள். அவற்றில் ஒழுங்கு இருக்கிறது; வரிசை