பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதுச்சேரி கம்பன் விழாத் தலைமை உரை

351


இரும்புத் துண்டு இருக்கிறது. அது ஒரு சாதாரணக் கொல்லனிடத்தில் இரும்புக் கொல்லனிடத்தில் கிடைக்கிறது. அவன் அதை இலாடமாக அடிக்கிறான். அந்த ஐம்பது வெண்பொற்காசுகள் விலை மதிப்புடைய இரும்பு நூறு இலாடமாக அடிக்கப்பட்ட பிறகு நூறு ரூபாய் விலை மதிப்புடையதாக மாறுகிறது. இந்த நூறுக்கும் ஐம்பதுக்கும் இடையில் இருக்கிற ஐம்பதை யார் எடுத்துக் கொள்கிறார்கள் என்பதை வைத்துத்தான் களவு நிர்ணயிக்கப்படவேண்டும். இந்த இரும்புத் துண்டை யாரோ ஒருத்தர் வீட்டுத் தோட்டத்திலே பொறுக்கிவைத்திருந்தாரே அவர் அந்த இரும்புக்கொல்லருக்குப் பத்தோப் பதினைந்தோ கொடுத்து விட்டு மீதியை அவர் எடுத்துக் கொள்ளுகிறார். அதற்குத் “திருடு” என்று பெயர் வைக்கிறான் பாரதி. அதே இரும்பை இன்னும் நுண்ணிய செயற்பாட்டுடன் காலம் காட்டும் கருவியாக கடிகாரமாக உருமாற்றம் செய்தால் அதற்கு ஐந்நூறு ரூபாய் விலை, இந்த ஐம்பது ரூபாய் விலை மதிப்புள்ள பொருளுக்கும் ஐந்நூறு ரூபாய் விலை மதிப்புள்ள பொருளுக்கும் இடைவெளியில் இருக்கிற பணம் எங்கு செல்கிறது? அங்கே களவு தோன்றுகிறது. உழைப்பைச் சுரண்டுகிறவரைக் கள்வர் என்று சொல்கிற பழக்கம் நம் நாட்டில் வரவேயில்லை. புரட்சி அங்கேதான் தோன்ற வேண்டும்! இப்படிப் பொருள் ஒரு இடத்திலே குவிகிறது; ஓரிடத்திலே வறுமை வளர்கிறது. “வண்மை இல்லை. ஓர் வறுமை இன்மையால்” என்றான் கம்பன். கம்பன் காலத்திலேயே வறுமை இருந்திருக்கிறது. அதை மாற்றியமைக்க நினைத்துப் பாடியிருப்பான் போலத் தெரிகிறது. ஏனென்றால் தமிழ்நாட்டு மக்களுக்கு வறுமை என்பது பரம்பரைச் சொத்து. பாட்டன், முப்பாட்டன், அவன் பாட்டன் காலத்திலேயே பெருந்தலைச் சாத்தனார் காலத்திலேயே வறுமைதான்! மடியில் கிடக்கிற பச்சிளங்