பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

352

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


குழந்தை தனக்குப் பால் கிடைக்காமல் தாய் முகத்தைப் பார்த்து அழுகிறது. அக்குழந்தைக்கு பாலூட்ட முடிய வில்லையே என்று தாய் கணவன் முகத்தைப் பார்த்து அழுகிறாள். அவன் அரசின் முகத்தைப் பார்த்து அழுகிறான். இது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த வாழ்க்கைச் சித்திரம் மறந்துவிடாதீர்கள். அதே இரண்டாயிர ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தமிழ்நாட்டின் நிலையைத் தமிழ்ப் பெருமக்கள் தமிழாசிரியன்மார்கள், சங்ககாலம், பொற்காலம், கடையெழு வள்ளல்கள் இருந்த காலம் என்றெல்லாம் கூறுகிறார்கள். அந்தக் காலத்திலேயே நண்பகல் உச்சிவேளை பசிக்கிற நேரம் கட்டிளங் காளைகளுக்கு வீட்டிலே அள்ளிச் சாப்பிட சோறில்லை. எங்கே சோறு கிடைக்கும் என்று அலைந்து திரிகிறார்கள். யாரோ ஒரு மனிதன் ஒரு குண்டான் சோறு வடித்துப் பிசைந்துக் கையுருண்டைச் சோறாக உருட்டி உருட்டிக் கொடுக்கிறான். அப்படி கையுருண்டைச் சோறு உருட்டிக் கொடுத்தவனுக்கு பசிப்பிணி மருத்துவன் பண்ணன் என்று புகழ்பாடிய நாடு இந்த நாடு. கையுருண்டைச் சோற்றை வாங்கிச் சாப்பிட்டு விட்டு எறும்புகளைப்போல வரிசை வரிசையாகப் போகிறார்கள் என்று 2000 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் நாட்டினுடைய நிலையைப் படம்பிடித்துக் காட்டுகிறது, நமது இலக்கியம். 2000 ஆண்டுகள் கழித்து நாம் என்ன முன்னேறியிருக்கிறோம்? சிறிய முன்னேற்றம் கையிலே உணவு வாங்குவதற்குப் பதில் தட்டிலே வாங்குகிற முயற்சி இங்கே நடந்திருக்கிறது. நமக்கு வெட்கம் இருக்க வேண்டாமா? எங்கேயிருந்து புரட்சி தோன்றும்? வறுமைக்கு என்ன காரணம்? புரட்சியைப் பற்றி சிந்திப்பது மட்டும் போதாது. காரணங்களையும் கண்டுபிடிக்க வேண்டும். கம்பனின் பாடல்கள் என்ன வறட்சி நிறைந்த பாடல்களா? அவைகளுக்கு உயிர்ப்பில்லையா? அவைகள் நமக்கு