பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதுச்சேரி கம்பன் விழாத் தலைமை உரை

353


நடைமுறைகளைக் காட்டக் கூடிய வழிகாட்டி இல்லையா? ஏன் கம்பன் நினைத்தது நடைபெறவில்லை!

கடைசியாக ஒன்றைச் சொல்லி முடிக்கின்றேன். கம்பனுடைய இராமகாதையே நீண்டதற்குக் காரணம் என்ன? இராமனுக்கு நாடு கிடைக்காததாலா? பரதன் நாடாள முடியாது என்று சொன்னதாலா? இவ்வளவு பெரிய காவியமாக இராமகாதை உருக்கொள்வதற்குக் கருவாக அமைந்தது எது? கைகேயி, நல்ல பெண்; நல்ல தாய்; நல்ல தலைவி; இரக்கமுடையவள்; இராமனிடத்தில் அளவற்ற அன்புடையவள். இராமனுக்கு முடிசூட்டு விழா என்றவுடன் அவள் மகிழ்ந்ததைப்போல கோசலை கூட மகிழவில்லை. இராமனுக்கு முடி சூட்டுவிழா என்ற செய்தியைக் கொண்டு வந்தவளுக்கு மணிமாலையைக் கழற்றிக் கொடுக்கிறாள்! எவ்வளவு உயர்ந்த தாய்! “நதியின் பிழையன்று நறும்புனலின்மை” என்று கம்பன் அற்புதமாகப் பாடிக் காட்டுகிறான். அந்தக் கைகேயி எவ்வளவு பெரியவளாக உயர்ந்து விளங்கிய கைகேயி கூனியினுடைய தொடக்க காலப் பேச்சில் மயங்கி விழாத கைகேயி ஏன் வீழ்ந்தாள்? எப்பொழுது வீழ்ந்தாள்? கண்டுபிடிக்க வேண்டாமா? அங்குதான் இருக்கிறது - புரட்சிக்குரிய கருத்து.

புரட்சிக்குரிய கருவாக இருந்தது, இராமகாதைக்கும் கருவாயிற்று. பல்வேறு செய்திகள் சொல்லிப் பார்க்கிறாள் கூனி, கேட்கவில்லை. கடைசியில் ஒன்றே ஒன்று சொல்கிறாள் “இராமன் முடிசூடினால் உடைமையெல்லாம் கோசலைக்காம் நினக்கு ஒன்று வேண்டின் கோசலை உதவி செய்தால்தான்” என்கிறாள் கூனி! முடிந்தது! விழுந்து விட்டாள் கைகேயி! அப்படியானால் என்ன நினைக்கிறீர்கள் நீங்கள்? ஆட்சியில் யார் அமர்கிறார்களோ அவர்களுக்கே உடைமை ஏகபோகமாகி மற்றவர்களுக்கு மற்றவர்கள் வாழ்க்கைக்கு உத்தரவாதமில்லை; பாதுகாப்பில்லை என்ற