பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

354

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பயம் ஏற்பட்டுவிடுகிறது. அந்தப் பயத்தினால் கைகேயி விழுகிறாள். இன்றைக்கு என்ன மாற்றம் ஏற்பட்டிருக்கிறது? அதேதான்! அதேதான்! அதேதான்! ஆள்கிறவர்கள் தயவு இல்லாமல் நம்மால் ஒரு நாள் மூச்சுவிடக்கூட முடியாது போலிருக்கிறதே! உடைமை என்பது ஓர் இரும்புப்பிடி. எந்த நாட்டில் மனிதனுக்கு உத்தரவாதமும் பாதுகாப்பும் இல்லையோ அந்த நாட்டில் ஒழுக்கத்தைக் காப்பாற்ற முடியாது.

கைகேயி சிறந்த சீலமுடையவளாக இருந்தாலும் சிறந்த தியாக புத்தி உடையவளாக இருந்தாலும் உத்தரவாதமும் பாதுகாப்பும் அவளுக்கும் அவள் மகனுக்கும் இல்லையென்று சொன்னவுடன் சடசடவென்று விழுந்துவிட்டாள். அதைப் போல இந்த நாட்டில் சடசடவென்று ஒழுக்கத்தை மறந்து அதை மறந்து இதை மறந்து நாலு காசு தேடி வைத்துக்கொள்ள வேண்டாமா என்று அலைகிறார்கள். அது அவர்கள் குற்றமல்ல. நாட்டு மக்களிடத்தில் பணத்திற்குத் தரும் மதிப்பு குறைய வேண்டும். மானுடத்தின் மதிப்பு உயர்ந்து விளங்க வேண்டும். மானுடம் சிறந்து விளங்க வேண்டும். எனவேதான் மானுடம் வென்றதம்மா என்று பின்னே முடிக்கிறான் கம்பன்.

கம்பன் புரட்சிக்கரு தாங்கிய பாடல்களை நாட்டுப் படலத்தில் - நகரப்படலத்தில் பாடியிருக்கிறான். ஆனால் அது புரட்சியாக உருப்பெறவில்லை. பாடலில் குறையில்லை. நாம் மரத்துப்போனவர்கள். மின்சாரம் கூட நம்மைத் தாக்காதுபோலத் தெரிகிறதே! ஆதலாலே கம்பன் வெள்ளி விழா கொண்டாடுகிற இந்தத் தருணத்தில் கம்பனுடைய பாடல்களில் நடைமுறைச் செயற்பாட்டுக்குரியவைகளைத் தேர்ந்தெடுப்பது, அவைகளைப் பற்றியும் மக்களுக்குச் சொல்வது, நடைமுறைச் செயற்பாட்டில் கம்பனைப் புகுத்தி வழிகாட்டி நன்னெறிப்படுத்துவது, ஆகிய நிகழ்ச்சிகளையும் சேர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.