பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதுச்சேரி கம்பன் விழாத் தலைமை உரை

355



இனி எதிர்வரும் காலத்தில் என்னுடைய வாழ்வியலோடு கம்பன் ஒட்டிக் கொண்டு வரவேண்டும். நான் கம்பனைப் புதுப்பார்வையில் படிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். நான் மிக இளமைக் காலத்தில் திருக்குறளைப் படிக்கத் தொடங்கினேன். மிகத் தெளிவாகச் சொன்னால் கம்பன் கழகத்து நண்பர்கள் எனக்கு நண்பர்களாக ஆன பிறகுதான் நான் கம்பனைப் படிக்கத் தொடங்கினேன். நண்பர்களுக்கு அனுசரணையாக இருக்கவேண்டும் என்பதால், என்னைக் கவர்ந்தது முதலில் திருக்குறள் தான். பலகாலும் திருக்குறளைப் படித்திருக் கிறேன். நேற்றைக்கு முன்தினம் நான் படித்த திருக்குறள், இன்றைக்கு ஒரு புதுப் பொருளோடு என் முன்னால் நிற்கிறது. “நீ என்னைப் படித்தாயா? உண்மையாகப் படித்தாயா?” என்று என்னைத் திருவள்ளுவர் கேட்பது போலத் தெரிகிறது. நாள்தோறும் அவர் சொல்கிற குறளில் புதுமை தெரிகிறது. அதுபோல் கம்பன் உங்களிடத்திலே பேசவேண்டும்; உயிர்ப்புடன் பேசவேண்டும்.

ஒரு சிறந்த மாக்கவி, தெய்வமாக்கவிஞன், ஒரு புதிய நாட்டைப்பற்றி எண்ணுகிறான் “கள்வரும் காவல் செய்வாரு மில்லாத நாடு” என்று அவனுக்கு முன் யாரும் பாடவில்லை. அவன்தான் முதன்முதலில் அப்படிப் பாடுகிறான். ‘திருடாதே’ என்று சொன்னவர்கள் உண்டு; திருடுவது பாவம் என்று சொன்னவர்கள் உண்டு. அவையெல்லாம் மிகப் பெரிய வசதி படைத்தவர்களுடைய ஒலி பெருக்கிகள்! கம்பன் தான் முதன்முதலில் - கம்பனும் பாரதியும் தான் ஒருவர் உழைப்பை எடுத்துக் கொள்கிறானே அவன்தான் முதல் திருடன் என்று சொல்லுகின்றனர். உழைப்பைச் சுரண்டுகிற முதல் திருடன் தோன்றிய பிறகு அடுத்தத் திருடன் தோன்றுகிறான். ஒரு திருடன் அடுத்தத் திருடனைத் தோற்றுவிக்கிறான். அதைத் தான் பாவேந்தனும் “பொருளாளி திருடர்களை விளைவிக்கின்றான்” என்றான்.