பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

356

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இவ்வகையில் புரட்சியைப் பற்றிச் சிந்தனை செய்து பாருங்கள்! ஆனால் இந்த நேரத்தில் நான் இப்படிப் பேசியபிறகு, புரட்சி, சோஷலிஸம் சமவாய்ப்புச் சமுதாய அமைப்பு இவைகளையெல்லாம் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலே நிலைகுலைந்து கிடக்கின்றனவே என்று நீங்கள் கேட்கலாம்! அவையெல்லாம் வாழ்க்கைப் பயணத்தில் ஏற்படுகின்ற சோதனைகள். அந்தச் சோதனைகள் காரணமாகவே அவைகளெல்லாம் பொய்த்துப் போய்விட்டன என்று சொல்லமுடியாது. நம்முடைய வள்ளலார்கூட முதன்முதலில் சோஷலிஸத்தைப் பற்றிச் சொல்லுகிறார்.

“வல்லார்க்கும் மாட்டார்க்கும் வாய்ப்பளிக்கும் வாய்ப்பே

என்று பாடுகின்றார்.

வாய்ப்பு என்பது Oppurtunity. சோஷலிஸ சமுதாயம் என்பது வீடும் துணியும் கொடுப்பது அல்ல. ஒருவனுக்கு பொருள் ஈட்டிக் கொள்வதற்குரிய உரிமைகளை வாய்ப்புகளை உண்டாக்குவது. ஒருவன் கைகளுக்கு வேலை செய்ய உரிமையைக் கொடுப்பது. அவனுடைய படைப்பில் உண்டான பொருள்களை அவனே அனுபவிப்பதற்கு உரிய உரிமையைக் கொடுப்பது அல்லது நாட்டுக்கு அர்ப்பணிக்கின்ற உரிமையைக் கொடுப்பது. சுதந்திரம் என்பதே எப்பொழுது சுதந்திரமாக இருக்கும்? கம்பன் அதைத்தான் எடுத்துச் சொல்கிறான். சுதந்திரம் என்பது என்ன? இன்னொருவனுடைய சுதந்திரத்திற்கு நீ ஒப்புரிமை கொடுத்தால்தான் உன்னுடைய சுதந்திரம் பாதுகாக்கப்படும். அதுதான் புரட்சியின் தடம். அந்தத் தடத்தை இனம் கண்டு கொள்ளுங்கள்.

கம்பன் புகழ் பற்றியும் புரட்சி பற்றியும் சிந்திப்பதற்கு வாய்ப்பளித்த கம்பன் கழகத்தார்க்கு மிக மிக நன்றி!