பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சங்கத் தமிழர் வாழ்வியல்

31


ஆன்றவிந் - கொள்கைச் சான்றோர்
பலர்யான் வாழுமூரே.

(புறம்-191)

ஒரு சமுதாய அமைப்பில் நிகழும் நிகழ்வுகளையும், நிகழ்வுகளுக்குப் பின்னணியாக இருக்கின்ற இன்ப துன்பங்களையும் நாம் அணுகும் முறையிலேயே முரண்பாடுகள் நீங்கிச் சிறப்புறுகின்றன; துன்பம் நீங்கி இன்பம் தருகின்றன.

சங்க காலத்துச் சான்றோர்களுள் கணியன் பூங்குன்றனார் என்ற பெரும்புலவர் உலகு தழுவிய ஒட்பமுடையவர். சிற்றெல்லைகளைக் கடக்க வழி காட்டியவர். சிறு செயல்களைத் தவிர்க்கக் கற்றுக் கொடுத்தவர்.

இலக்கிய உலகிற்குக் கொடையெனக் கிடைத்த “யாதும் ஊரே யாவரும் கேளிர்!” என்ற சொற்றொடர் கணியன் பூங்குன்றனார் தந்ததேயாம். ஆம்! ஊர், வாழ்க்கைக்கு இன்றியமையாதது தான்! ஆனால் “எனது ஊர்” “உனது ஊர்” என்ற வேறுபாடுகள் தோன்றின் வாழ்க்கை நரகமாகி விடுகிறது. அதனால் எல்லா ஊரையும் தம் ஊர் போல்வே கருதி, நல்லன இயற்ற வேண்டும் என்று அறிவுறுத்துகின்றார்.

சமுதாய அமைப்பில் சுற்றத்தார் என்ற குருதிச் சார்புடைய உள்வட்டம் அமைதல் தவிர்க்க இயலாததே ஆயினும் இந்த உள்வட்டம் சமுதாயம் என்ற பொதுமைக்கு இடையூறாக வளர்ந்து விடக்கூடாது.

ஆதலால் எல்லாரையுமே சுற்றத்தாரைப் போல ஒப்ப நோக்கவேண்டும் என்பது பழந்தமிழ்க் கொள்கை. இத்தகு உயர் தமிழ்க் கொள்கையை இழந்தமையினால், சாதிச் சழக்குகளுக்கு ஆளாகித் தமிழகம் அல்லற்பட்டுக் கொண்டிருக்கிறது. இன்றையத் தமிழகத்திற்கு உயிர் தருவது கணியன் பூங்குன்றனார் பாட்டேயாகும்.