பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சங்கத் தமிழர் வாழ்வியல்

33


சிறியோரையும் இகழ்தல் கூடாது. சிறியோர், அவர்களாக வலியச் சிறியோராகவில்லை. அவர்களைச் சிறியோராக்கிய சமுதாய நிகழ்வுகள் நினைவில் கொள்ளத்தக்கன.

ஆதலால், பெரியோரை வியத்தலும் சிறியோரை இகழ்தலும் சரியான சமுதாய மரபல்ல என்ற சங்கத் தமிழர் வாழ்வியற் கொள்கை என்றைக்கும் பொருந்துவது!

“யாதும் ஊரே யாவரும் கேளிர்!
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே! வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே! முனிவின்
இன்னாது என்றலும் இலமே! மின்னொடு
வானம் தண்துளி தலைஇ யானாது
கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படுஉம் புணைபோல் ஆருயிர்
முறைவழிப் படுஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின் மாட்சியில்
பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே!”

(புறம்-192)

மனித உலகம் தோன்றிய நாள்தொட்டு சமுதாய அமைப்பில் இன்பமும் துன்பமும் கலந்தே சமுதாயத்தை அழைத்து வழி நடத்திக்கொண்டு வந்திருக்கின்றன. ஆனால் இரு வேறுபட்ட இன்பதுன்பச் சூழலை, சான்றோர்கள் தொடர்ந்து எதிர்த்துப் போராடிக் கொண்டே வந்திருக்கின்றனர். வெற்றி முழுதாகக் கிடைக்கவில்லை.

அதுமட்டுமன்று, இயற்கையில் அமைந்த திருமணம், மரணம் இவற்றோடு தொடர்புடைய இன்பதுன்பங்களைக் கூட சங்ககாலத் தமிழர் உடன்படாது எதிர்த்திருக்கின்றனர்.