பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தொடரக் கூடியதாக உரம் பெற்றது என்பதை எண்ணும் பொழுது அவர்களின் காதல் மாட்சியை எண்ணி வாழ்த்துதற்குச் சொற்கள் ஏது?

“களவும் கற்று மற” - என்றொரு பழமொழி தமிழகத்தில் வழங்கி வருகிறது. இப்பழமொழி சங்க காலத் தமிழரின் அகத்திணை வாழ்வியலின் களவு நெறியை அடிப்படையாகக் கொண்டு தோன்றியதேயாகும்.

அதாவது, தலைவனும், தலைவியும் தற்செயலாகக் காண்பர். நல்லூழ் கூட்டக் காதல் தோன்றும், உற்றாரும் ஊராரும் அறியாது தனியே சந்திப்பர். கலந்து பேசி மகிழ்வர். மற்றவர் அறியாது கூடுவதால் “களவியல்” என்றாயிற்று.

இங்ஙனம் களவியலில் சந்தித்துக் காதலை வளர்த்துக் கொண்ட தலைவன், கற்பியல் அமைக்க-திருமணம் செய்ய முனைவான். இதை நினைவூட்டும் வகையில் களவியலில் தலைவியைச் சந்தித்துக் காதலித்தல் தவறன்று. ஆனால், அது தொடரக் கூடாது என்ற குறிப்பில் பிறந்த பழமொழி இது.

களவியலில் யாருமின்றித் தனியே சந்திக்கும் தலைவனும் தலைவியும்கூட அவர்கள் உள்ளத்தால் அன்பினால் க்லந்து பழகுவதன்றி மெய்யுறு புணர்ச்சி நிகழ்வதில்லை. இதனைக் கபிலரின் குறிஞ்சிப் பாட்டில் வரும் தோழி செவிலிக்கு எடுத்துக் கூறுகிறாள்.

“வேய்புரை மென்றோள் இன்துயில் என்றும் பெறான்”

(குறிஞ்சிப். 242)

என்று.

தலைவன் தலைவியிடத்திற் கொண்ட நட்பு மிகமிக உயர்ந்தது. அஃது ஆழ்கடலைவிட ஆழமானது. அதனால் அவன் மெய்யறு புணர்ச்சியையே குறிக்கோளாகக் கொண்டவனல்லன். வரம்பிகந்த இன்பத்தைத் துய்ப்பதற்குரிய செல்வம் இல்லாதவனுமல்லன்.